search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரோமானியப் படையுடன் போர் புரிவதற்கான ஆயத்தங்கள்
    X

    ரோமானியப் படையுடன் போர் புரிவதற்கான ஆயத்தங்கள்

    அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முற்றிலும் புரிந்து கொண்ட மக்கள், கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர்.
    மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட பின் முஸ்லிம்களின் உள்நாட்டுப் பிரச்னைகளும் சிரமங்களும் முற்றிலுமாக முடிவுற்றது. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முற்றிலும் புரிந்து கொண்ட மக்கள், கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர். அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொண்டு மகிழ்ச்சியாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். 

    ஆனால் அக்காலத்தில் உலகத்தில் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்த ரோமானியப் பேரரசு தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரபுக் கோத்திரங்கள், தன் கட்டுப்பாட்டை விட்டு விலகி, முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்வதை ரோமானிய மன்னர் கைஸரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரும் படையொன்றைத் திரட்டி, அதில் ரோமர்களையும் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்த கஸ்ஸான் கிளையைச் சேர்ந்த அரபியர்களையும் சேர்த்துக் கொண்டு தீர்க்கமான ஒரு போருக்குத் தயாரானான். 

    இச்செய்தி மதீனாவில் பரவலாகப் பேசப்பட்டது. முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் நிலவியிருந்தது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் “எவ்வளவுதான் சிரமம் ஏற்பட்டாலும் ரோமர்களது எல்லைக்கும் செல்லக் கூடாது அதே சமயம் இஸ்லாமிய எல்லையில் அவர்கள் படையுடன் நுழைய வாய்ப்பும் அளிக்கக் கூடாது” என்று திட்டவட்டமான, தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தார்கள். 

    நபி(ஸல்) அவர்கள் “நாம் ரோமர்களைச் சந்திக்க இருக்கிறோம் என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அதற்குத் தேவையான முழுத் தயாரிப்புகளையும் செய்து கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தி, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்கு ஆர்வமூட்டினார்கள். அல்லாஹ் அத்தியாயம் பராஆவின் ஒரு பகுதியை இறக்கி வைத்தான். துணிவுடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கியும், இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் அவர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினான். நபி (ஸல்) அவர்களும் தர்மம் செய்வதின் சிறப்புகளையும், அல்லாஹ்வின் பாதையில் தங்களின் உயர்வான பொருட்களைச் செலவு செய்வதின் சிறப்புகளையும் கூறி தங்களின் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். 

    உடனே முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க வெகு விரைவாகப் போருக்குத் தயாராகினர். மக்காவைச் சுற்றியுள்ள அரபி கோத்திரத்தார்கள் எல்லாம் பல வழிகளில் மதீனா வந்து குழுமினர். போருக்கான செலவுகளைச் செய்ய இயலாத வறுமையில் உள்ள நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் ரோமர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறோம். எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள்” என்று கேட்டனர். நபி (ஸல்) மிக்கக் கவலையுடன் “உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வாகனம் ஒன்றுமில்லையே” என்றார்கள். 

    அந்தப் பதிலைக் கேட்ட தோழர்கள் “அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய எங்களிடம் வசதி இல்லையே!” என்று அழுதவர்களாகச் சபையிலிருந்து திரும்பிச் சென்றனர். அப்போது அல்லாஹ், “போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் “உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, போருக்காகத் தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே! அவர்கள் மீதும் போருக்குச் செல்லாதது பற்றி எவ்வித குற்றமும் இல்லை” என்ற இறை வசனத்தை அருளினான். 

    முஸ்லிம்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு அல்லாஹ்வின் பாதையில் பொருட்களைச் செலவு செய்வதிலும், இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டனர். குறைவாகவோ அதிகமாகவோ தங்களால் முடிந்ததை எவ்விதக் கஞ்சத்தனமுமின்றி மக்கள் அல்லாஹ்வின் பாதையில் வழங்கினார்கள். ஆனால் உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மை உள்ளவர்களோ அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கருமித்தனம் செய்தனர். 

    அப்போது “முஃமின்களில் தாராளமாகத் தர்மம் செய்பவர்களையும் வேறு பொருள் எதுவுமில்லாததால் தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனம் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு” என்ற இறைவசனம் அருளப்பெற்றது. 

    இவ்வாறு முடிந்தளவு முன்னேற்பாடுகளுடன் இஸ்லாமியப் படை மதீனாவிலிருந்து போருக்குப் புறப்பட்டது. 

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 9:92, 9:79

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×