search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்: புன்னகையும் நகைச்சுவையும்
    X

    இஸ்லாம்: புன்னகையும் நகைச்சுவையும்

    நபிகளார் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருப்பதைப் போல நகைச்சுவை, விளையாட்டு கலந்த இயல்பான வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.
    '‘புன்னகை பூப்பதும் ஓர் அறமே!’’ என்று கூறினார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இது மிக எளிதான, எவரும் அன்றாடம் செய்யக்கூடிய ஓர் சிறந்த அறச்செயல் ஆகும். இதற்கு எந்தச் செலவும், உழைப்பும் தேவையில்லை. இதற்குத் தேவைப்படுவது மனித நேயம் மட்டுமே. நம்மில் பலருக்கும் முகத்தில் எளிதாக புன்னகை வந்து விடுவதில்லை. சந்திக்கும் மனிதர்களின் பதவி, செல்வம், புகழ் ஆகியவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்து, பலத்த யோசனைக்குப் பிறகு புன்முறுவல் பூப்பார்கள். தம்மை விட அந்தஸ்தில் குறைந்தவர்களைப் பார்த்து எளிதில் சிரித்து விட மாட்டார்கள். ஆட்சியாளர்கள், ஆன்மிகவாதிகள், சிந்தனையாளர்கள் மக்களுடன் எளிதில் கலந்து விடுவதில்லை; நகைச்சுவையாகப் பேசுவதும் இல்லை. ஆனால் மனித நேயம் கொண்டவர்கள், எவரைப் பார்த்தாலும், எவ்வித தயக்கமும் இல்லாமல் புன்னகை புரிவார்கள்.

    நபிகள் நாயகம் ஆன்மிகத் தலைவர், ஆட்சியாளர், படைத்தளபதி, தத்துவஞானி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும், எப்பொழுதும் சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் காணப்படுவார்கள்.

    * ‘‘நபிகளாரின் வாழ்வு புன்முறுவல் கலந்த ஒன்றாக இருந்தது. வளத்திலும் வறுமையிலும், இன்பத்திலும் துன்பத்திலும், வீட்டிலும் வெளியிலும், பிரயாணத்திலும் போரிலும், பள்ளிவாயிலிலும் ஏன் நோயில் வீழ்ந்திருந்தபோதிலும்! இப்படி எல்லா நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் நபிகளார் சிரிக்க மறந்ததில்லை’’ என்கின்றார், நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) (நூல்: பைஹகி)

    * வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாயிலில் நபிகளார் உணர்ச்சியோடு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதிலும், அதை இடை மறித்து கோரிக்கை வைத்தவருக்கு பதிலளித்தது மாத்திரம் அல்லாமல் புன்னகைக்கவும் செய்திருக்கிறார்கள் என்று அனஸ் பின் மாலி என்ற நபித்தோழர் கூறுகிறார்.

    * நபிகள் நாயகம் இறக்கும் தறுவாயிலும் புன்னகை பூப்பவராக இருந்தார். நபிகளார் நோயுற்றிருந்த காரணத்தினால் அவரது இறுதி நாட்களில் பள்ளிவாயிலுக்குச் சென்று தொழுகை நடத்த முடியாமல் போகவே, தனது நெருங்கிய தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களை தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்துமாறு பணித்திருந்தார். நபிகள் நாயகம் திங்கட்கிழமை அன்று முற்பகலில் மரணம் அடைந்தார். அதே நாளில் வைகறைத் தொழுகையை மக்கள், அபூபக்கரின் தலைமையில் தொழுவதைத் தமது அறையில் இருந்து பார்த்து ஆனந்தமாக சிரித்தார்.

    இவ்வாறு வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் நபிகள் நாயகம் புன்னகை பூத்தவராகவே இருந்தார்.

    நபிகளாரின் நகைச்சுவை

    தலைவர்களும், அறிவு ஜீவிகளும் எப்போதும் அழுத்தமாகவே இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் நம்மிடத்தில் உள்ளது. நபிகளாரின் வாழ்க்கையோ இதற்கு மாறாக உள்ளது. புன்னகை பூத்த முகத்தோடு வாழ்ந்ததோடு, நகைச்சுவை உணர்வும் ததும்பப் பெற்றவராக இருந்தார்.

    * ஒருவர் நபிகளாரிடம் தாம் சவாரி செய்வதற்கு ஒரு ஒட்டகம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘‘நான் ஒரு ஒட்டகக் குட்டியின் மீது உம்மை சவாரி செய்ய வைக்கிறேன்.’’ என்றார்கள். அதற்கு அவர், ‘‘இறைவனின் தூதரே! ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?’’ என்று கேட்டார். ‘‘எல்லா ஒட்டகமும் தன் தாய்க்குக் குட்டிதானே!’’ என்று நபிகளார் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

    * நபிகளாரிடம் ஒரு கிழவி வந்து, ‘‘இறைத்தூதரே! இறைவன் என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்ய வேண்டும் என இறைஞ்சுங்கள்’’ எனக் கேட்டார். அதற்கு நபிகளார், ‘‘இன்னாரின் தாயே! சொர்க்கத்தில் கிழவிகள் நுழைவது இல்லையே!’’ என்றார்கள். அந்தக் கிழவி உடனே அழ ஆரம்பித்து விட்டாள். ‘‘எந்தப் பெண்களும் கிழவியாகச் சொர்க்கத்தில் நுழையப் போவதில்லை. (எல்லாப் பெண்களும் கன்னியராகவே சொர்க்கத்தில் நுழைவார்கள்)’’ என்று கூறி அதற்கு ஆதாரமான குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். (56: 36,37)

    * உம்மு அய்மன் என்ற பெண் நபிகளாரிடம் சென்று, ‘‘என் கணவர் உங்களை அழைக்கிறார்’’ என்று சொன்னபோது, நபிகளார், ‘‘யார் அவர்? கண்ணிலே வெண்மை இருக்குமே, அவரா?’’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘‘இறைவன் மீது ஆணையாக, அவரது கண்ணில் வெண்மை இல்லையே’’ என்றாள். நபிகளார், ‘‘இல்லை, அவர் கண்ணில் வெண்மை உள்ளது’’ என்று சொல்ல, மீண்டும் அப்பெண், ‘‘சத்தியமாக இல்லை’’ என்று சொல்ல, நபிகள் நாயகம், ‘‘கண்ணில் வெள்ளைப் பகுதி இல்லாத நபரே இல்லை’’ என்றார்கள்.

    இன்னும் இதுபோன்ற பல நகைச்சுவையான நிகழ்வுகள் நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் மனிதனுக்கு நன்மை பயப்பதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்திருந்தன.

    நகைச்சுவைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் நபிகளார் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

    * நகைச்சுவைக்காக பொய் பேசக் கூடாது.

    ‘‘நகைச்சுவை உணர்வோடு எங்களுடன் உரையாடுகின்றீர்கள் என்பதை நாங்கள் காண்கிறோம்’’ என்று தோழர்கள் நபிகளாரிடம் கூறியபோது, ‘‘ஆம்! அப்போதும் நான் உண்மையைத் தவிர வேறெதுவும் சொல்வதில்லை.’’ என்று பதில் அளித்தார்கள். (நூல்: திர்மிதி)

    * மக்களை மகிழ்விப்பதற்காக பொய் பேசி சிரிக்க வைப்பவனுக்குக் கேடு உண்டாகும்.

    * நகைச்சுவையாக பேசுகிறோம் என்ற பெயரில், கேலி, கிண்டலான வார்த்தைகளைக் கூறக் கூடாது.

    ஆக, நபிகளார் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருப்பதைப் போல நகைச்சுவை, விளையாட்டு கலந்த இயல்பான வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.

    டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
    Next Story
    ×