search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்: முன்மாதிரி மாமனிதர்
    X

    இஸ்லாம்: முன்மாதிரி மாமனிதர்

    வாருங்கள்! நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் படிப்போம்; நமது நிலையை உயர்த்துவோம்; வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் காண்போம்.
    “நல்லவற்றைச் செய்ய வேண்டும்; அனைவருக்கும் பயன்பட்டு வாழ வேண்டும்; எல்லோரும் நம்மை நல்லோர் என்று சொல்ல வேண்டும்; இறந்த பிறகும் மக்கள் நம்மை நினைவு கூர வேண்டும்” இதுவே மனித வாழ்வின் உயர்ந்த லட்சியமாக இருக்க முடியும். இதைச் சொல்வது மிக எளிது; அடைவது அரிது. ஆனால் முடியாதது அல்ல. கொண்ட லட்சியத்தில் தெளிவும் உறுதியும் வேண்டும். நன்மை தீமை பற்றிய தெளிவான சிந்தனை, கள்ளம் கபடமற்ற உள்ளம், நல்லவர்களின் நட்பு, தீமையான சூழலில் இருந்து விலகி வாழ்தல் எனப் பல பண்புகள் இதற்குத் தேவைப்படுகின்றன.

    இந்த வரிசையில் தேவைப்படும் இன்னொரு முக்கிய பண்பு, நல்லோர்களின் முன்மாதிரிகளையும், வரலாறுகளையும், வாசித்து உணர்வு, ஊக்கம் பெறுதல். அவர்களால் நல்லவர்களாக வாழ முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணம் பிறக்கும்; அவர்களின் வாழ்க்கை நம்மை நல்ல முறையில் நடத்திச் செல்லும்; நமக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழும்.

    நாம் அத்தகைய முன்மாதிரியாக வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆவார்.

    வாய்மையுடன் வாழ்ந்தவர்.

    மனித நேயத்தைக் கடைப்பிடித்தவர்.

    ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்தவர்.

    தீமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்தவர்.

    எளிமை, அடக்கத்தின் திருவுருவாக வாழ்ந்து காட்டியவர்.

    வீரமும், ஈரமும் ஒருங்கே அமையப் பெற்றவர்.

    இன, மத, மொழி பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்தியவர்.

    சமாதானத்தின் தூதுவர்.

    மேலும்,

    நல்ல கணவராக, தந்தையாக

    நல்ல அண்டை வீட்டுக்காரராக

    ஏழைகள், தொழிலாளர்கள், அனாதைகள் ஆகியோரை நேசித்தவராக

    பெண்களைக் கண்ணியத்துடன் நடத்தியவராக

    குழந்தைகள் மீது அன்பு கொண்டவராக

    நேர்மையான வணிகராக

    நீதி மிக்க ஆட்சியாளராக

    சிறந்த ராஜதந்திரியாக

    போர்த் தளபதியாக

    நல்ல போதகராக

    ஆன்மிகவாதியாக வாழ்ந்து காட்டியவர்.

    அவர் நபிகள் நாயகம் என்று அழைக்கப்படுகின்ற முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

    முகம்மது நபி அவர்கள் கி.பி. 570-ல் அரேபியாவில் உள்ள மக்காவில் பிறந்தார். பிறக்கும் முன்பே தந்தையையும், பிறந்த ஆறு ஆண்டுகளில் தாயையும் இழந்து அனாதை ஆனார். சிறுவராக இருந்தபோது கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். பின்னர் வணிகர் ஆனார். கதீஜா என்ற பெண்ணை மணந்து குழந்தைகளைப் பெற்றார்.

    இளமைப் பருவத்திலேயே வாய்மையாளராகவும், (அஸ்-ஸாதிக்), மக்களின் நம்பிக்கைக்குரியவராகவும் (அல் அமீன்) திகழ்ந்தார். மக்கள் தங்கள் விவகாரங்களைத் தீர்க்க அவரையே நீதிபதியாக ஏற்றுக் கொண்டனர். அவர் வாழ்ந்த மக்காவில் மூடப் பழக்க வழக்கங்கள், தீமைகள், அநீதிகள், ஏற்றத் தாழ்வுகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், மது, சூது, முறைகேடான உறவுகள், வட்டி ஆகியன மலிந்திருந்தன.

    இவற்றைக் குறித்து கவலைப்பட்டவராக மக்காவின் அருகில் இருந்த ‘ஹிரா’ குகையில் தனித்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். அவ்வேளையில் அவருக்கு இறைவனிடம் இருந்து இறை வசனங்கள் அருளப்பட்டன. அன்று முதல் அவர் இறைத்தூதர் என்ற தகுதியைப் பெற்றார். ஒரே இறைவனை வணங்கும்படியும், மனிதர்களைச் சமமாக நடத்தும்படியும், பலவீனமான மக்களை அரவணைக்கும்படியும், இறைவன் தடுத்த தீமைகளை விட்டொழிக்கும்படியும் போதித்தார்.

    முகம்மது நபியின் போதனைகள் மக்கா நகரத் தலைவர்களுக்கு பேரிடியாக வந்து விழுந்தது. அவரை நாட்டை விட்டு விரட்டவும் அல்லது கொல்லவும் திட்டமிட்டனர். 13 ஆண்டு கால பரப்புரைக்குப் பின்னர் தாயகத்தைத் துறந்து 200 மைல் தொலைவில் இருந்த யத்ரிப் (மதீனா) நகருக்கு அம்மக்களின் அழைப்பின்பேரில் சென்றார். அங்கு 10 ஆண்டுகள் வாழ்ந்து தனது பரப்புரையை முழுமை செய்து, புதிய சமூகம் ஒன்றை நிறுவினார். 5 லட்சம் மக்கள் அவரது அணியில் இணைந்திருந்தனர். கி.பி. 532-ல் அவரது 63-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இதுவே நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறாகும்.

    நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்ற வாழ்வின் லட்சியத்தை அடைய, நமது ஆளுமையை வளர்க்க, நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவரது வாழ்க்கை பெரிதும் உதவும். ஒரு கருத்தைத் தத்துவமாகப் படிப்பதை விட, அதன்படி வாழ்ந்த ஒருவரின் வரலாற்றைப் படிப்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?

    நபிகள் நாயகம் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் அம்சங்கள் பெற்றவரென்றோ ஒருபோதும் கூறியதில்லை. மாறாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன் என்றே கூறினார். எனவே அவருடைய வாழ்க்கை பின்பற்ற முடியாத ஒன்றல்ல.

    வாருங்கள்! நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் படிப்போம்; நமது நிலையை உயர்த்துவோம்; வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் காண்போம்.

    -டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்.
    Next Story
    ×