search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதீனாவாசிகளுக்குப் பெருமானார் வழங்கிய ஆறுதல்
    X

    மதீனாவாசிகளுக்குப் பெருமானார் வழங்கிய ஆறுதல்

    நபி முஹம்மது (ஸல்) மக்காவை வெற்றி கொண்ட பின்னர், மக்காவாசிகள் இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்று புரிந்து கொண்டனர்.
    நபி முஹம்மது (ஸல்) மக்காவை வெற்றி கொண்ட பின்னர், மக்காவாசிகள் இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்று புரிந்து கொண்டனர். நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவைக் கேட்டு நடக்க மக்காவாசிகள் உறுதியெடுத்தனர். இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்தனர்.

    உஹுத் போரில் ஹம்ஜாவுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபியிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொள்ள வந்தார். ஆனால் தமது செயலுக்காக நபி(ஸல்) தண்டனை தந்துவிடுவார்களோ என்று பயந்து, அடையாளம் தெரியாதபடி வந்தார். நபி(ஸல்) மற்றவர்களுக்குத் தரும் இஸ்லாமிய ஒப்பந்த வாக்கையே ஹிந்துக்கும் சொன்னார்கள்.

    “அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது, திருடக் கூடாது. விபசாரம் செய்யக் கூடாது; உங்கள் குழந்தைகளைக் கொல்லக் கூடாது; எவரின் மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பக் கூடாது. உங்களில் இவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறவருக்குப் பிரதிபலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு. இந்தக் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இம்மையிலேயே தண்டிக்கப்பட்டால், அது அவருக்குப் பரிகாரமும் அவரைத் தூய்மைப்படுத்தக் கூடியதும் ஆகும்.

    அல்லாஹ் எவருடைய குற்றத்தை மறைத்து விடுகிறானோ அவரின் விவகாரம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கப்படும். அவன் நாடினால் அவரை வேதனைப்படுத்துவான். நாடினால் அவருக்கு மன்னிப்பளிப்பான்” என்று சொல்லி முடிக்கும் முன்னர், ஹிந்து “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்து எங்கள் குழந்தை குட்டிகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா? என்று கேட்டார்.

    அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு புன்னகையுடன், “நீ ஹிந்த் தானே” என்று வினவினார்கள். அதற்கு  ஹிந்த் பின்த் உத்பா, நபி(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே! நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

    நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இந்த உன்னுடைய விருப்பம் இன்னும் அதிகமாகும்' என்று பதிலளித்துவிட்டு, “நியாயமான அளவிற்கு உன் கணவனின் பணத்தை எடுத்துக் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள்.

    அப்போது குஜாஆ கிளையினர் மற்றொரு கிளையைச் சேர்ந்தவரை கொலை செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நபி(ஸல்) சொன்னார்கள் “இதற்கு முன்னர் நீங்கள் செய்த கொலைகளும் பாவங்களும் போதும். இனி இப்படியான காரியத்தைச் செய்யாதீர்கள். நீங்கள் கொன்றவருக்குரிய நஷ்ட ஈட்டை நிறைவேற்றிவிடுங்கள். இதற்குப் பின்னர், கொலை செய்யப்பட்டால் ஒன்று கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து நஷ்ட ஈடு பெறுவது என்பதே நியாயமான தீர்ப்பு” என்றார்கள். யமன் வாசிகள் இந்தத் தீர்ப்பை நபி(ஸல்) அவர்களிடம் எழுதிப் பெற்றுக் கொண்டனர்.

    இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மதீனாவாசிகள், நபி(ஸல்) தனது சொந்த ஊரான மக்காவிலேயே தங்கிவிடுவார்களோ? என்று அச்சப்பட்டனர். இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் “நான் வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன். மரணித்தால் உங்களுடனேயே மரணிப்பேன்” என்று கூறினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 2:46:2460, 7:97:7468, 2:45:2434, 4:63:3825

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×