search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறையச்சத்தின் உறுதியான வெளிப்பாடு...
    X

    இறையச்சத்தின் உறுதியான வெளிப்பாடு...

    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதமான திரு நாமங்களில் ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால் ‘கண்காணிப்பாளன்’ என்று பொருளாகும்.
    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதமான திரு நாமங்களில் ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால் ‘கண்காணிப்பாளன்’ என்று பொருளாகும். ஈமானின் (இறையச்சத்தின்) உறுதியான நிலைப்பாடு ‘யகீன்’ என்பதாகும். இந்த இரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

    சமுதாயச் சீரழிவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் காரணம், மனிதர்கள் தவறுகள் செய்பவர்களாக இருப்பதுதான். தவறு செய்யும் ஒரு மனிதன் பின் விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை.

    தான் செய்வது தவறு என்று உணர்ந்தால்தான் தன்னைத் திருத்திக் கொள்ள முற்படுவான். தாங்கள் செய்வது தவறே அல்ல என்று நினைப்போரும், மற்றவர்கள் செய்வதை விடவா பெரிதாக நான் தவறுகள் செய்கிறேன் என்று தங்கள் நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவோரும் ஒரு நாளும் தங்களின் தவறு களைத் திருத்திக்கொள்ள மாட்டார்கள்.

    மனிதர்கள் பொதுவாகவே மற்றவர்கள் தங்களைக் கவனிக்கிறார்களா, மதிக் கிறார்களா, கண்ணியம் தருகிறார்களா என்பதில்தான் அதிகக்கவனம் செலுத்துகிறார்கள். அந்தக் காரணத்திற்காகவே மற்ற வர்கள் பார்வையில் இருக்கும் பொழுது தவறு செய் வதற்கு அஞ்சு கிறார்கள், தயக்கம் காட்டுகிறார்கள்.

    தனிமையில் இருக்கும்பொழுது எந்த தயக்கமும், பயமும் இன்றி தவறுகள் செய்யக்கூடிய மனோபாவம் உள்ளவர்களாக மாறி விடுகின்றனர்.

    ஆனால், ‘ஆழ்கடலின் ஆழத்தில் கூட அனைத்தையும் கண்காணிப்பவனாக இறைவன் இருக்கிறான்’ என்பதை தவறு செய்யும் மனிதன் உணருவதில்லை. அதை உணரும் பட்சத்தில் எந்நிலையிலும் தவறு செய்வதற்கு அஞ்சுவான். மனதின் இச்சைக்கு அடிபணிந்து என்றாவது தவறு செய்துவிட்டாலும், தன் இறைவனைக் குறித்த அச்சத்தில், குற்ற உணர்வில் தவித்து, தொழுகையில் உள்ளச்சத்துடன் அழுது மன்னிப்புக் கேட்டு மன்றாடுவான். ஷைத்தானின் ஊசலாட்டத்தால் மனம் தடுமாறும் காலங்களில் கூட அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சியும், அவனின் திருப்பொருத்தத்தை வேண்டியும் பாவம் செய்வதைத் தவிர்த்து விடுவான்.

    இதுவே ஈமானின் உறுதிப்பாடு (யகீன்) என்பதாகும். ஈமானில் உறுதிப்பாடு உள்ளவர்கள் தன் இறைவன் கண்காணிப்பாளனாக (ரகீபாக) இருக்கிறான் என்று உறுதியாக நம்புகிறார்கள். தன்னைப் படைத்த இறைவன் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள். இந்நினைப்பு அவர்களைப் புடம் போடுகிறது. அவர்களின் செயல்பாடுகளில் எவ்வித கள்ளத்தனமும் வெளிப்படாது. அவர்கள் உள்ளத்தில் எப்படியோ அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுகிறார்கள்.

    மற்ற மனிதர்களுக்குத் தெரியாவண்ணம் தவறு செய்பவர்கள் தங்கள் அகம் மறைத்து, முகம் வேறொன்று காட்டித் திரிவார்கள். அத்தகைய மனிதர்கள் சிந்தித்துப் பார்த்தால் தாங்கள் செய்யும் தவறு கள் புலப்படும்.

    அவர்கள் தங்கள் ஈமானின் உறுதிப்பாட்டை பலப்படுத்திக் கொண்டால், இறைவன் தங்களை எப்பொழுதும், எந்நிலையிலும் கண் காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவர்களின் நாடி, நரம்புகள் அனைத்திலும் ஓடிக்கொண்டிருக்கும்.

    நபி (ஸல்) அவர்கள், ‘தனிமையில் இருக்கும் பொழுதும், மக்கள் மத்தியில் இருக்கும் பொழுதும், உன்னுடைய அச்சத்தை எனக்குத் தா’ என இறைனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.

    ஒரு முறை ஆடு மேய்க்கும் சிறுவனிடம், தனக்கு ஒரு ஆட்டினை விலைக்குத் தருமாறு உமர் (ரலி) கேட்டார்கள். அப்போது அந்தச் சிறுவன் ‘இவை எனக்குச் சொந்தமான ஆடுகள் அல்ல, என் எஜமானருக்குச் சொந்தமானது’ என்று கூறினான்.

    ‘அதற்கென்ன, உன்னிடம், உன் எஜமானர் ஆடு களைப் பற்றி விசாரித்தால் ஓநாய் சாப்பிட்டு விட்டதாகக் கூறு’ என்று உமர் (ரலி) தெரிவித்தார்.

    பதறிப்போன அச்சிறுவனோ ‘என் எஜமானர் இங்கில்லை என்றாலும், அல்லாஹ்வுமா இல்லை?, அல்லாஹ் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான்?’ என்று பதில் கூறினான்.

    அச்சிறுவனின், ‘அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்ற உறுதியான நிலைப்பாட்டினை அறிந்த உமர் (ரலி) நெகிழ்ந்து போனார்கள்.

    மற்றுமொரு சம்பவத்தில் கலீபாவான உமர் (ரலி) ஒரு நாள் இரவில் நகர்வலம் செல்கிறார். ஒரு வீட்டினருகே வரும் பொழுது தாயும், மகளும் பேசிக்கொள்ளும் சத்தம் வீட்டிற்குள் இருந்து வரு கிறது.

    தாய் மகளைப் பார்த்து, பாலில் தண்ணீர் கலக்கச் சொல்கிறார். ‘பாலில் தண்ணீர் கலக்கக் கூடாதென்ற உமரின் உத்தரவு உங்களுக்குத் தெரியாதா?’ என்று மகள் மறுக்கிறார். ‘கலீபா என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்?’ என்று தாய் கேட்டபோது, ‘கலீபா இங்கு இல்லையென்றால் என்ன, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறானே’ என்று மகள் பதிலளித்தார்.

    அந்தப்பெண்ணின் இறை அச்சத்தை உணர்ந்த உமர் (ரலி) மகிழ்ந்து, பின்னர் தன் மகனுக்கு அந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்.

    நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த கலீபாக்களின் காலத்திலும் மக்கள் உறுதியான ஈமானுடன் (இறை அச்சத்துடன்) வாழ்ந்ததற்கான சம்பவங்கள் நபி மொழி தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் இன்று உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இப்படியே தொடர்ந்தால் இது எங்கு போய் முடியும் என்ற கேள்விக் கணைகள் நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கின்றன.

    இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் ‘என் இறைவனே, உனக்காகவே நான், உன் பொருட்டு, உன் தண்டனைகளுக்கு அஞ்சி, நான் எந்தத் தவறுகளும் செய்ய மாட்டேன்’ என்ற பிரார்த்தனையுடனும், ஈமானின் உறுதிப்பாட்டுடனும் தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால், நம் சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக, முன் மாதிரி சமுதாயமாக விளங்கும்.

    கண்காணிப்பாளனாக (அர் ரகீபாக) இருக்கும் அல்லாஹ், நமக்கும், நம் சந்ததியருக்கும் ஈமானின் உறுதிப்பாட்டை பலப்படுத்தி, அனைத்து விதமான தவறுகள் மற்றும் பாவங்களில் இருந்தும் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், புரசைவாக்கம், சென்னை.
    Next Story
    ×