search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நபிகள் பெருமானார் காட்டிய நேர்வழி
    X

    நபிகள் பெருமானார் காட்டிய நேர்வழி

    இன்றைய தினம் நான் உங்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்துவது இல்லை. அல்லாஹ்வும் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்.
    நபி (ஸல்) 10,000 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

    இது தெரியாமல் நபியவர்களின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் தனது குடும்பத்தினரோடு மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவிற்கு இஸ்லாமை ஏற்க வந்து கொண்டிருந்தார். வழியிலேயே நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அதே இடத்தில் அனைவரும் இஸ்லாமை ஏற்றனர்.

    அதேபோல் நபி(ஸல்) அவர்கள் பேச மறுத்த, நபியவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸும், மாமியின் மகன் அப்துல்லாஹ் இப்னு அபூ உமையாவும் நபி(ஸல்) அவர்களைத் தேடி வந்தனர். இருவருமே முஸ்லிம்களுக்கு நிறையத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் என்பதால் நபி(ஸல்) அவர்களுடன் பேச மறுத்துவிட்டார்கள்.

    மக்கா பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது மனைவி உம்மு ஸலமா(ரலி), நபி(ஸல்) அவர்களைச் சமாதானப்படுத்தி வந்தவர்களுடன் பேசும்படி கேட்டுக் கொண்டார்கள்.

    அபூஸுஃப்யானிடம் அலீ(ரலி) அவர்கள் "நீங்கள் திருக்குர்ஆனில் யூஸுஃப் நபியின் சகோதரர்கள் யூஸுப்(அலை) அவர்களிடம் மன்னிப்பு கேட்டவாறு நீங்களும் கேட்டால் நபி(ஸல்) நிச்சயம் மன்னித்துவிடுவார்கள்" என்று யோசனையைத் தெரிவித்தார்கள்.

    அவ்வாறே அபூ ஸுஃப்யானும் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் உங்களுக்குப் பெரும் தீங்கிழைத்தோம். ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை மொழிந்தார்கள்.

    உடனே நபி(ஸல்) அவர்களும் அதன் பதில் வசனமான “இன்றைய தினம் நான் உங்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்துவது இல்லை. அல்லாஹ்வும் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்” என்று பதிலளித்தார்கள்.

    அபூ ஸுஃப்யான், "நான் நேர்வழிக்கு அழைக்கப்பட்டுள்ளேன். அதை நான் ஏற்று நேர்வழி பெறுகிறேன். நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியத்தேனே அவர்தான் அவர்தான் நான் நேர்வழி பெற்றதற்குக் காரணம். அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி அல்லாஹ்வை காட்டித் தந்தார்" என்று கவிதை நடையில் நபி(ஸல்) அவர்கள் முன் உருகினார்.

    திருக்குர்ஆன் 12:91,92, இப்னு ஹிஷாம், ரஹீக் அல் மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×