search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்: தண்ணீர் சிக்கனம் அவசியம்
    X

    இஸ்லாம்: தண்ணீர் சிக்கனம் அவசியம்

    தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!
    சிக்கனம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாக, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.

    தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும்.

    ‘மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.

    அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)

    தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணா கிறது.

    உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டு கிறது.

    உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வரு கிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.

    இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்து கள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.

    தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை இஸ்லாம் ஆதரிக்கிறது. இதுகுறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘உங்கள் பிள்ளைகளை யாசகர் களாக விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மேலானது’ என்றார்கள்.

    இது நம் குடும்ப உறுப்பினர்களுக் கானது என்று மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது, வருங்கால சந்ததிகளை எவ்வகையிலும் ஏழைகளாகவோ அல்லது இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாதவர்களாகவோ ஆக்கிவிடக்கூடாது. இது ஒரு மிகப்பெரிய சமுதாய பொறுப்பாகும்.

    எனவே, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த சந்ததிகளும் பயன்படுத்த விட்டுக்கொடுப்போம்.

    அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.

    தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக் கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங் களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

    தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!

    கமால்பாஷா, வி.களத்தூர்.
    Next Story
    ×