search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்: அச்சமும் நம்பிக்கையும்
    X

    இஸ்லாம்: அச்சமும் நம்பிக்கையும்

    இறைவனின் விசாலமான கருணை அவன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கற்றுத் தரும் அதேவேளை, அவனது தண்டனை அச்சம் கொள்ளவும் செய்ய வேண்டும்.
    “அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் வீசுவாளா?”

    ஒரு தாயைச் சுட்டிக்காட்டி நபி (ஸல்) அவர்கள் தன்னருகில் நின்றுகொண்டிருந்த தோழர்களிடம் கேட்ட கேள்வி இது.

    ஹவஸான் எனும் போரின்போது போர்க் களத்தில் நின்ற போது இந்தக் கேள்வியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

    ஹவஸான் போரில் எதிரிகளும் முஸ்லிம்களும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர். போர் உக்கிரமாக நடைபெற்றது. முஸ்லிம்கள் பெரும் வெற்றிபெற்றனர். எதிரிகள் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருந்தனர்.

    அப்போது அங்கு நடைபெறும் களேபரம் எது குறித்தும் கவலைப்படாமல் ஒரேயொரு பெண் மட்டும் பெண்கள் பகுதியில் சுற்றிச் சுற்றி வந்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள். கொலை செய்யப்பட்ட மக்கள் குறித்தோ, கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருப்பது பற்றியோ அல்லது போர் குறித்த கவலையோ எதுவுமின்றி எதையோ உன்னிப்பாகத் தேடிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கு மத்தியில் இருக்கும் குழந்தைகளை உற்று நோக்கத் தொடங்கினாள். தவறிப்போன தனது குழந்தையைத்தான் அவள் தேடுகின்றாள் என்பதை அனைவரும் அறிந்தனர்.

    அந்தப் பெண்மணி என்னதான் செய்கிறாள் என்று நபி (ஸல்) அவர்களும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

    திடீரென ஒரு குழந்தையை அந்தப் பெண் கண்டெடுத்தாள். உடனே வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள். நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்தாள். உலகமே ஒன்று திரண்டு அவளிடமிருந்து அந்தக் குழந்தையைப் பறிக்க முயன்றாலும் முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண்ணுடைய அணைப்பு இருந்தது. கண்ணீருடன் அதன் கன்னத்தில் முத்தமிட்டாள். பொது இடம் என்ற உணர்வையும் மறந்து அமுதூட்டத் தொடங்கிவிட்டாள். அப்போது அவளின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறென வழிந்தோடியது.

    இந்தக் காட்சி பெருமானாருக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அப்போதுதான் அந்தப் பெண்ணைச் சுட்டிக்காட்டியவாறு, “அந்தக் குழந்தையை அந்தப் பெண் நெருப்பில் வீசுவாளா?” என்ற கேள்வியை தோழர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

    தோழர்கள் கூறினர்: “இல்லை இறைத்தூதர் அவர்களே! ஒருபோதும் அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் வீசமாட்டாள். கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையைக் காணாதபோது அவள் என்ன பாடுபட்டாள் என்பதைத்தான் நாம் கண்ணால் கண்டோமே. கண்டெடுத்த பின்னர் அந்தக் குழந்தையை அவள் எப்படி மார்போடு அணைத்து முத்தமிட்டாள் என்பதையும் நாம் கண்டோம். பின் எப்படி அவள் நெருப்பில் வீசுவாள்?”

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணை! இந்தக் குழந்தைமீது இவளுக்குள்ள அன்பைவிட இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பும் கருணையும் கொண்டவனாக இருக்கின்றான்” (புகாரி)

    தோழர்களுக்கு பாடம் புகட்டுவதற்கான சந்தர்ப்பம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மிக அழகிய முறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனைப் பயன்படுத்துவார்கள். இதுவும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம்தான்.

    அடியார்கள் மீது இறைவன் கொண்டிருக்கும் பேரன்பை என்னவென்று சொல்வது..! ஆகவேதான் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: “மறுமை விசாரணையை யார் விசாரிக்கவேண்டும்; இறைவனா எனது தாயாரா.. என்று தெரிவு செய்யும் உரிமையை மறுமையில் என் இறைவன் எனக்குத் தந்தால் இறைவனிடம் நான் கூறுவேன்; இல்லை. இறைவா.. நீயே என்னை விசாரிப்பாயாக! என் தாயைவிட நீதான் என்மேல் அதிக கருணை மிக்கவன்”.

    இறைவன் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை, நமது பெற்றோர் நம்மீது வைத்திருக்கும் அன்பைவிட அவன் பெரும் கருணையாளன் எனும் கருத்தை பெருமானார் (ஸல்) அவர்களின் அந்தக் கேள்வி சுட்டிக்காட்டுகிறது.

    அதேவேளை இந்த எண்ணம் தவறு செய்வதற்கு தூண்டு கோலாக ஆகிவிடவும் கூடாது. ஆம், அவன் கருணையாளன் தானே.. என்னவேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் எனும் சிந்தனை ஒருபோதும் உள்மனதில் தோன்றிவிடக்கூடாது. அவன் கருணையாளன் தானே. கடமையான தொழுகையை பின்னர் தொழுதுகொள்ளலாம் என்றோ, மக்களின் உரிமையில் கை வைக்கலாம் என்றோ, அடுத்தவர் பொருளை அபகரிக்கலாம் என்றோ, நீதி அநீதி, சத்தியம் அசத்தியம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை, எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றிவிடக் கூடாது.

    இறைவன் எப்படி மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றானோ அப்படியே கடுமையாக தண்டிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்: “இறைவன் மாபெரும் கருணையாளன் என்ற நம்பிக்கை இருப்பதைப் போன்றே தவறு செய்தால் தண்டிப்பான் என்ற அச்சமும் இருக்க வேண்டும்”.

    ‘பெரும் தவறுகளைக் குறித்து மட்டுமல்ல, மாறாக சிறிய தவறுகளைக் குறித்துகூட இறைவன் தண்டிப்பான்’ என்று அச்சம்கொண்டவனாகவே மனிதன் இருக்க வேண்டும் என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

    அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்: கைபர் வெற்றிகொள்ளப்பட்டது. போர் செல்வமாக எங்களுக்கு மாடு, ஒட்டகம், வீட்டு உபயோகப் பொருட்கள், தோட்டங்கள் ஆகியவை கிடைத்தன. நாங்கள் மதீனாவுக்குத் திரும்பினோம்.

    நபி (ஸல்) அவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை அந்த அடிமை இறக்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர்மீது பாய்ந்தது. ‘அவருக்கு இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்’ என்று மக்கள் கூறினர்.

    அப்போது நபிகளார் கூறினார்கள்: ‘இல்லை, எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படுமுன் அவர் எடுத்துக்கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்துகொண்டிருக்கிறது’.

    இதைக் கேட்டபோது ஒரு மனிதர், இரு செருப்பு வார்களைக் கொண்டுவந்து, ‘இது போர்ச் செல்வம் பங்கிடப்படுமுன் நான் எடுத்துக்கொண்ட பொருள்’ என்று கூறினார்.

    அப்போது நபிகளார் கூறினார்கள்: ‘இவை சாதாரண செருப்பு வார்கள் அல்ல. இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே நரகத்தின் செருப்பு வார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி)

    இறைவனின் விசாலமான கருணை அவன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கற்றுத் தரும் அதேவேளை, அவனது தண்டனை அச்சம் கொள்ளவும் செய்ய வேண்டும். இரண்டுக்கும் மத்தியில் சமநிலை பேணவேண்டும். அதுதான் உண்மையான இறை நம்பிக்கை.

    -மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    Next Story
    ×