search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனிதாபிமானம் நிறைந்த செயல்கள்...
    X

    மனிதாபிமானம் நிறைந்த செயல்கள்...

    ‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
    ‘தனக்கு கடன் கொடுப்பதும் பிடிக்காது, கடன் வாங்குவதும் பிடிக்காது’ என்று சிலர் கூறுவதுண்டு. சிரமத்தில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பது என்பது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகும்.

    கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் அனுமதிக்கும் இஸ்லாம், அதற்கான விதிமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “நம்பிக்கையாளர்களே, நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக்கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவரோ அல்லது வாங்கியவரோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதியோடு எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதியாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக்கொடுக்கவும்.

    தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதியான முறையில் வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள்.

    அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல்-வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுதமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும்.

    இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியானதாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை.

    ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டபோதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல்-வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக் கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன். (2:282)

    கடன் கொடுப்பவரும், கடன் வாங்குபவரும் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை இதைவிட தெளிவாக யாரும் சொல்லமுடியாது.

    கடன் வாங்கியவர் குறித்த காலத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் இருந்தால் அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். இது மறுமையில் மிகுந்த நன்மையைக்கொடுக்கும். இதுபற்றிய நபிமொழிகள் வருமாறு:-

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) இவ்வாறு அறிவித்தார்:

    “(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் ‘இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும்’ என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்”.

    மேலும் ‘உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒருவரிடம் (மறுமை நாளில்) கேள்வி, கணக்கு கேட்கப்படும். அப்போது அவரிடம் நன்மை எதுவும் இருக்காது. அவர் மக்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்து வந்தவர். அவர் துன்பப்படுவோருக்கு கடனை தள்ளுபடி செய்திட தன் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். இதன் காரணமாக மறுமை நாளில் - தள்ளுபடி செய்வதில் இவரை விட நானே அதிக தகுதி படைத்தவன். எனவே அவருடைய பாவங்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ மஸ்ஊது (ரலி).

    அல்லாஹ் தன் அடியர்களில் ஒருவருக்கு செல்வம் வழங்கியிருந்தான். (மறுமையில்) அவரிடம், ‘உலகில் என்ன நற்காரியம் செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். அவன் ‘இறைவா! எனக்கு உன் செல்வத்தை வழங்கி இருந்தாய். அதன் மூலம் மக்களிடம் நான் வியாபாரம் செய்தேன். தர்மம் கொடுப்பது என் குணத்தில் இருந்தது. வசதியானவர்களிடம் இலகுவாக நடந்து கொண்டேன். துன்பப்பட்டவருக்கு கால அவகாசம் அளித்தேன்’ என்று கூறுவார். அப்போது இறைவன், ‘உன்னை விட நான் கொடையளிப்பவன். ஆகவே என் அடியாளின் பாவங்களை தள்ளுபடி செய்யுங்கள்’ என (வானவர்களுக்கு) இறைவன் கூறுவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி)

    ‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

    கடன் கொடுத்தவர் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கியவர் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி நடந்து கொள்ளும் போது இறைவனின் அருளும், மன்னிப்பும் கிடைக்கும்.

    இந்த மறுமை நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு இருசாராரும் நடக்கும் போது இம்மையும், மறுமையும் நலமாக அமையும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    -எஸ். அமீர் ஜவ்ஹர், காரைக்கால்.
    Next Story
    ×