search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிஸ்ரா மன்னனின் அகந்தையும் அழிவும்
    X

    கிஸ்ரா மன்னனின் அகந்தையும் அழிவும்

    கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு கிஸ்ராவின் மகன் தனது தந்தையையே கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.
    ஹுதைபிய்யாவின் சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு இஸ்லாமிய அழைப்புப் பணியில் முஸ்லிம்கள் தீவிரமாக இருந்து வந்தனர்.

    முஹம்மது நபி(ஸல்) அவர்கள்,  அரசர்களுக்கும், கவர்னர்களுக்கும் கடிதம் எழுதி இஸ்லாமிய அழைப்பை விடுவித்தார்கள். எகிப்து நாட்டு மன்னருக்கு நபிகளார் எழுதிய கடிதத்திற்கு யோசித்துப் பதிலளிப்பதாகச் சொன்ன மன்னர் முகவ்கிஸ் நபிகளாருக்கு மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும், நபிகளார் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளித்தார்.

    அதேபோல முஹம்மது நபி(ஸல்) பாரசீக மன்னர் கிஸ்ராவிற்கும் கடிதம் எழுதினார்கள். அதில் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

    நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறை நிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் நீங்கள் மறுத்துவிட்டால் நெருப்பை வணங்குபவர்களின் குற்றமெல்லாம் உங்களையே சாரும்” என்று எழுதி அனுப்பினார்கள்.

    கிஸ்ரா அதைப் படித்து விட்டுக் கிழித்தெறிந்து, பெருமையுடன் “எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?” என்று கூறினான். கிஸ்ரா தனது கவர்னருக்குக் கடிதம் எழுதி, அதில் ‘முஹம்மது தன்னை வந்து பார்க்கட்டும்’ என்று வீரர்கள் மூலம் சொல்லி நபிகளாரை அழைத்து வரச் சொல்லி இருந்தான்.

    கிஸ்ராவின் கவர்னர் பாதான் அனுப்பிய வீரர்கள் அச்செய்தியை நபிகளாருக்கு தெரிவித்ததோடு நபி(ஸல்) அவர்களை எச்சரித்தும் சில வார்த்தைகளைக் கூறினர். நபி(ஸல்) எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்கள். நபி(ஸல்) அனுப்பிய கடிதத்தைக் கிஸ்ரா கிழித்தெறிந்தான் என்று அறிந்ததும் “அல்லாஹ் அவனது ஆட்சியைக் கிழித்தெறியட்டும்” என்று கூறியதோடு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்வீரர்களிடம் கூறினார்கள்.

    கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு கிஸ்ராவின் மகன் தனது தந்தையையே கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள். மறுநாள் வீரர்கள் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள்.

    அதற்கு அவர்கள் அதிர்ச்சியடைந்து அதை நம்ப முடியாமல் கவர்னருக்கு எழுதி அனுப்பியதோடு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டுத் தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் கிஸ்ராவின் மகனுடைய கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: “நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது அடுத்தக் கட்டளை வரும் வரை எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. அவரைப் பழித்துப் பேசிவிடாதே” என்று எழுதப்பட்டிருந்தது.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×