search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏர்வாடியில் கோலாகலம்: சந்தனக்கூடு திருவிழாவில் திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு
    X

    ஏர்வாடியில் கோலாகலம்: சந்தனக்கூடு திருவிழாவில் திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் கடந்த 24-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை யானை மற்றும் குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் புத்தாடை அணிந்து, தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தி, பெண்கள் வழி நெடுகிலும் குலவையிட்டு வந்தனர்.

    இன்று அதிகாலை 5.20 மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    வருகிற 23-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. கலெக்டர் நடராஜன் தர்காவிற்கு வந்து பாதுஷா நாயகம் அடக்கஸ்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். விழா ஏற்பாடுகளை கோர்ட்டு ஆணையர் மாவட்ட நீதிபதி (ஓய்வு) தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு தலைமையில் தர்கா ஹக்தார்கள் செய்தனர்.

    கீழக்கரை தாசில்தார் தமீம்ராஜா, மாவட்ட காஜி சலாஹூத்தீன், முன்னாள் தர்ஹா கமிட்டி நிர்வாகிகள் அம்ஜத் ஹூசைன், துல்கருணை பாட்சா, செய்யது பாரூக் ஆலிம்,அரூஸி, செய்யது சிராஜ்தீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அசன் இபுராகிம், முகம்மது பாக்கீர் சுல்த்தான், கோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை செய்யது இபுராகிம், ஹாஜி செய்யது ஹூசைன், மெடிக்கல் அகமது இபுராகிம், அ.தி.மு.க. கிளை செயலாளர் அஜ்முல் ரக்மான் நியூ மணீஸ் பேக்கரி நிறுவனர் ஜெயபிரகாஷ் மற்றும் ஹக்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திட்ட இயக்குநர் தனபதி, ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல்ஜாமியா, பாண்டி ஆலோசனையின் பேரில் ஊராட்சி செயலர் அஜ்மல் கான் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின் வசதி, சுகாதார பணிகள் செய்யப்பட்டன. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தர்கா வளாகத்தில் மதுரை மதினா லைட் நிறுவனர் ஜாகிர் உசேன் தலைமையில் மின் அலங்காரம் செய்யப்பட்டு தர்கா மின் அலங்காரத்தால் ஜொலித்தது.

    ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஸ்மீனா உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில், கீழக்கரை டி.எஸ்.பி.,பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் பால்பாண்டி, சத்தியபிரபா, திலகவதி, கணேசன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×