search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷங்கள் போக்கும் வரதராஜபெருமாள் கோவில் தங்க பல்லி
    X

    தோஷங்கள் போக்கும் வரதராஜபெருமாள் கோவில் தங்க பல்லி

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறையில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை பக்தர்கள் தொட்டு தடவி வணங்கினால் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள்.
    வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது.

    இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது.  கீதையில் கிருஷ்ண பகவான் தனது வடிவமாக குறிப்பிட்ட அரச மரமாக இந்த அரச மரம் கருதப்படுகிறது. இந்த மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை தினத்தன்று சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாக கிடைக்கும் என்று ஐதீகம் உள்ளது. ராமானுஜருக்காக கூரத்தாழ்வார் கண் பார்வை இழந்தது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அவருக்கு மீண்டும் வரதராஜ பெருமாள் ஆலயத்தில்தான் கண் பார்வை திரும்ப கிடைத்தது. எனவே இந்த ஆலயத்தில் வழிபட்டால் கண் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

    சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இருமகன்கள் கவுதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். ஒருநாள் அவர்கள் பூஜைக்கு கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.

    பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என தெரிவித்தார். அதன்படி இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.

    பெருமாள் அவர்கள் இருக்கும் மோட்சத்துக்கு செல்ல வழிகாட்டினார். அதோடு சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும் என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும். சூரியன், சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.

    இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறை பின்பகுதியில் மேற்கூரையில் தங்கம், வெள்ளியில் பல்லிகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் அந்த பல்லிகளை தொட்டு தடவி வணங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள். இதனால் வட மாநில மக்களிடம் வரதராஜபெருமாள் ஆலயம் பல்லி ஆலயம் என்று புகழ் பெற்றுள்ளது.

    Next Story
    ×