search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷங்கள் நீங்கும் திருவிடைமருதூர்
    X

    தோஷங்கள் நீங்கும் திருவிடைமருதூர்

    திருவிடைமருதூர் கோவில் பக்தர்களின் அனைத்து விதமான தோஷங்களை நீங்கப்பெறும் ஸ்தலமாக இருக்கிறது. இதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் வரகுண பாண்டியன். இவன் ஒருமுறை அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வேட்டையாடி முடித்து அரண்மனை திரும்புவதற்கு இரவு நேரமாகி விட்டது. அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடுமையான இருள் காரணமாக, வழியில் படுத்திருந்த அந்தணன் ஒருவன், பாண்டிய மன்னன் அமர்ந்து சென்ற குதிரை மிதித்து இறந்து விட்டான்.

    தன்னையும் அறியாமல் இந்த பிழை செய்திருந்தாலும், அந்தணனை கொன்ற பாவத்தால் வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் அந்தணனின் ஆவியும், அரசனை பற்றிக்கொண்டு ஆட்டுவித்தது.

    வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்தும் அந்தணனின் ஆவியின் பிடியில் இருந்தும் விடுபட மதுரை சோமசுந்தரரை நாடினான்.
    அப்போது சோமசுந்தரர், வரகுண பாண்டியனின் கனவில் தோன்றி, திருவிடைமருதூர் சென்று அங்கு மகாலிங்கேஸ்வரராக உள்ள தன்னை தரிசனம் செய்து வரும்படி கூறினார். ஆனால் எதிரி நாடான சோழ நாட்டில் அமைந்துள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்ற குழப்பம் வரகுண பாண்டியனை தொற்றிக்கொண்டது.

    இந்த நேரத்தில் சோழ மன்னன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வரும் தகவல் வரகுணபாண்டியனுக்கு கிடைத்தது. வரகுண பாண்டியன், சோழ மன்னனுடன் போர் புரிந்து அவரை போரில் வெற்றி கொண்டு, சோழ நாடுவரை அந்த மன்னனை துரத்திச் சென்றான். சோழ நாட்டுக்குள் புகுந்ததும் திருவிடைமருதூர் சென்று அங்குள்ள மகாலிங்கேஸ்வரரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தரிசனம் செய்தான்.

    கோவிலுக்குள் நுழைந்த வரகுண பாண்டியனை, பின்தொடர முடியாமல் பிரம்மஹத்தி தோஷமும், அந்தணனின் ஆவியும், கோவில் உள்ளே நுழைய தைரியமின்றி வாசலிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என்று கிழக்கு வாசலின் வெளியே காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ, வரகுண பாண்டியனை மேற்கு வாசல் வழியாக வெளியேறி செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டார்.

    அதன்படி அரசனும் மேற்கு வாசல் வழியாக வெளியேறி பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதனை நினைவு கூறும் வகையில் இன்றளவும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கிலுள்ள அம்மன் சன்னதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலமாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான தோஷங்கள் நீங்கப்பெறும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது.
    Next Story
    ×