search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் திருத்தலம்
    X

    திருமண தடை நீக்கும் திருத்தலம்

    திருமணம் தடை ஏற்படுபவர்கள் காளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து ஜாதகத்தை அர்ச்சனை செய்தால் அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. ஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது.

    இந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.

    இங்கு குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும் குறைவற்ற செல்வத்திற்கும் கால பைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.
    Next Story
    ×