search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷங்களை போக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்
    X

    தோஷங்களை போக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்

    பெரும்பாக்கம் ஸ்ரீவெங்கடவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும்.
    விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவெங்கடவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது பல்லவர் காலத்திற்குட்பட்ட பழமையான கோவில் ஆகும்.

    திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு அபிமான தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார்.

    மூலவரின் மார்பில் சிம்ம பதக்கம் காட்சி தருகிறது. இதனால் இந்த கோவில் தென்அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது. பெரியபெருமாளின் வலது கை அபய ஹஸ்தமாகவும், இடது கை கடி ஹஸ்தமாகவும் இருப்பதால் இந்த பெருமாளை தரிசிப்பவர்கள் திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிபலம் போன்ற இடங்களில் உள்ள பெருமாள்களை தரிசித்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு லட்சுமியை மடியில் தாங்கி கிழக்கு நோக்கி லட்சுமி நரசிம்மர் காட்சி அளிக்கிறார். தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் மிகுந்த சிறப்பை அடையலாம். அவ்வாறு செய்தால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும். மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபாடு செய்வது உகந்தது.

    இந்த கோவிலில் கல்யாண ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதி உள்ளது. அவர் மேற்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு மட்டை தேங்காய் அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும்.
    Next Story
    ×