search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பித்ரு கடன் செய்வது ஏன்?
    X

    பித்ரு கடன் செய்வது ஏன்?

    மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு. பித்ருக் கடன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு.

    தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும், சுற்றத்தாருக்கும், உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘ஆத்மக் கடன்’ என்றும், தனது குலதெய்வத்திற்கும், விருப்ப தெய்வத்திற்கும், கோவில்களில் இருக்கும் தெய்வங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘தெய்வக் கடன்’ என்றும், தன் குலத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் சிரார்த்தங்கள் ‘பித்ருக் கடன்’ என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த மூன்று கடன்களில் பித்ரு கடன் தான் மிக முக்கியமானது. நம்முடைய உடலையும், உயிரையும் கொடுத்தது நமது பெற்றோர். எனவே ஒவ்வொருவரும், தனது தாய்- தந்தை இறந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் அவர்கள் இறந்த திதியன்று சிரார்த்தம் செய்ய வேண்டும். ‘சிரார்த்தம்’ என்ற வடமொழிச் சொல்லுக்குச் ‘சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் செயல்’ என்பது பொருளாகும்.

    சிரார்த்தம் என்பது முன்னோர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், மரபு வழியினருக்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் என்று பொருள். நன்மை தரக்கூடிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு செயல்கள் யாரை நினைத்துச் செய்கின்றோமோ, அவர் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். இல்லை, பூலோகத்தில் நமக்கு அருகிலேயே கூட இருக்கலாம்.

    அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ அல்லது உயர்ந்ததாகவோ இருக்கலாம். நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம், அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால், அவர்களின் நிலை உயர உதவும். மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இவ் உலக துன்பம் தீர உதவும். எனவே, பித்ரு காரியங்களை ஒவ்வொரு வரும் கடமையாகச் செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

    ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் வசுமித்திரர்கள், ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள். உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து, தங்களது வாரிசுகள் செய்யும் நற்செயல்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்று, தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம். இறந்து போன ஒருவருக்காக அவரது மகன், பேரன், சகோதரன் முதலானவர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும், கோத்திரம் மாறிய பெண் வழி மரபுரிமையினரும் சிரார்த்தம் செய்யலாம்.

    Next Story
    ×