search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணத்தை தாமதப்படுத்தும் தோஷங்கள்
    X

    திருமணத்தை தாமதப்படுத்தும் தோஷங்கள்

    செவ்வாய் தோஷம் தவிர சில முக்கியமான தோஷங்களும் திருமணத்தை தாமதப்படுத்தும். அவை ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பு தோஷம் ஆகும்.
    திருமணம் நடைபெற காலதாமதம் ஆகிவிட்டால் பெரும்பாலனவர்கள் ஜாதகத்தைத்தான் குறை சொல்வார்கள். ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கும் என்பார்கள்.

    பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் திருமணத்தை தாமதப்படுத்தும் தோஷங்களாக உள்ளன. அவை ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பு தோஷம் ஆகும்.

    செவ்வாய் தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1,2,4,7,8, ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும்.செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தில் மட்டுமே சேர்க்க வேண்டும்.

    ராகு-கேது தோஷம்

    லக்னம், 2,7,8, ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

    மாங்கல்ய தோஷம்

    இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி ஆகும். 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தியாகும்.

    சூரிய தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,7,8, ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதாரயோகமும், வீடு தள்ளி 42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது.

    களத்திர தோஷம்


    களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண தாமதம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரியோகம் பெறுவது, கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும். ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ம் வீட்டில் இரண்டு அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அது கட்டாயம் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

    புணர்ப்பு தோஷம்

    ஒருவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனும் கர்ம காரகன் சனியும் சேர்க்கை பெற்று நிற்பது, பரிவர்தனை பெறுவது, சார பரிவர்தனை பெறுவது, சம சப்தம பார்வை பெறுவது போன்றவை திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படுத்தும் தோஷமாகும். இந்த தோஷங்கள் அனைத்தையும் அடித்து விரட்டி தூள்-தூளாக்கும் அற்புதமான பரிகாரத் தலமாக திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஆலயம் திகழ்கிறது. இந்த தலத்தில் பரிகாரம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டவர்கள் விரைவில் திருமணம் நடைபெற்று சுபீட்சமாக வாழ்கிறார்கள். 
    Next Story
    ×