search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சகல தோஷங்களும் போக்கும் கேடிலியப்பர்
    X

    சகல தோஷங்களும் போக்கும் கேடிலியப்பர்

    தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரை வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
    முருகப்பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். ‘அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது?’ என்று தனது தந்தையான சிவபெருமானைக் கேட்டார்.

    அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை, நவலிங்க பூஜை செய்து வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.

    கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப்பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த சொரூபியான சுந்தர குஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவம் கொண்டு, வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். இதனால் இத்தல அன்னைக்கு ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற திருநாமமும் உண்டு.

    தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

    திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன. நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது. 
    Next Story
    ×