search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு தோஷ பாதிப்பை குறைக்கும் திருநாகேஸ்வரம்
    X

    ராகு தோஷ பாதிப்பை குறைக்கும் திருநாகேஸ்வரம்

    ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.
    நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனிக்கோவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ராகுபகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

    கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள்.

    அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர். இறைவன் பெயர் நாகேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவியின் நாமம் பிறையணிஅம்மன். மகாசிவராத்திரி அன்று ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். இதனால் தினமும் சிவ தரிசனம் பெறவேண்டி தனது மனைவிகள் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் தங்கி விட்டார்.

    பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.

    இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கு பிறையணி வாநுதல் உமை சன்னிதி, கிரிகுஜாம்பிகை சன்னிதியும் உண்டு. இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு.

    ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை. கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. ஒருவர் ஜாதகத் தில் 3, 6, 11 ஆகிய இடங்களில் ராகு விளங்கினால் ராஜயோகம் கிட்டும்.

    பரிகாரமுறை

    ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வந்து விநாயகர், சிவன், கிரிகுஜாம்பாள் ஆகியோரை வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஹோமம், நாகசாந்தி செய்யலாம்.

    கோவிலில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் விலகும். அதே போன்று வீட்டிற்கு நாகம் வந்தால் அவர்கள் பித்தளையில் நாக வடிவினை செய்து கோவிலில் வைக்க வேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லால் ஆன நாக வடிவை வைத்து தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும்.

    ராகு திசை கடுமையாக பாதித்தால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் துர்க்கை, காளியை வழிபடுவது நல்லது. உளுந்துசாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். நாகநாதருக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கி நாகநாதரின் பரிபூரண அருள் கிடைக்கும் கும்பகோணத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி உள்ளது.

    Next Story
    ×