search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவம் போக்கும் மகாமக குளம்
    X

    பாவம் போக்கும் மகாமக குளம்

    பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.
    மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது வருவது மகாமகம் ஆகும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் எல்லா உலகத்தில் உள்ள தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம்.

    ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உடைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர்.

    மக்களின் பாவங்களை விலக்கிக் கொள்ளும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவிரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கயிலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் ‘நதிகளே! மகாமகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள்.

    ஒரு மாமங்கம் வரை செய்த பாவங்கள் நசிந்து விடும்' என்றார். அதனால் 12 நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம். மாசிமகத்தன்று இங்கு வந்து நீராடுபவர்களுக்கும், அவர்களை சேர்ந்த குடும்பத்தாருக்கும் புண்ணியம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

    மகாமக குளத்தில் நீராடி எழுந்ததும் 9 பெண்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை, தேங்காய், குங்குமம், ரவிக்கைத்துணி கொடுப்பது சிறப்பான பலனை தரும்.
    Next Story
    ×