search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைபிள் கூறும் வரலாறு: எரேமியா
    X

    பைபிள் கூறும் வரலாறு: எரேமியா

    விவிலியத்தில் உள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை.
    விவிலியத்தில் உள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை. காரணம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அச்சுறுத்தலாகவோ, புரிந்து கொள்ளக் கடினமாகவோ, மன அழுத்தம் தரக்கூடியதாகவோ இருக்கின்றன என்பது தான்.

    எரேமியா நூல் ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரு பெரிய நூல். நாற்பது ஆண்டு கால இறைவாக்குரைத்தலின் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் ‘ஜெரமியட்’ என்றால் ‘துயரத்தின் பாடல்’ என்று பொருள்.

    இந்த நூலும் ஒரு துயரத்தின் பாடலாய் தான் இருக்கிறது. எபிரேய மொழியில் ‘எரேமியா’ என்பது ‘கட்டியெழுப்பு’ என்றும் பொருள்படும், ‘உடைத்தெறி’ என்றும் பொருள்படும்.

    அவருடைய இறை செய்தியும் அவரது பெயரைப் போலவே இருக்கிறது. “கீழ்ப்படிபவர்களை கடவுள் கட்டியெழுப்புவார், நிராகரிப்பவர்களை கீழே தள்ளுவார்” என்பதே அவரது இறைவாக்கின் மையம்.

    இந்த நூலில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன. எரேமியாவின் நீண்ட பணிவாழ்வின் காரணமாக அவருடைய போதனைகளில் சில முரணாக மாறுகின்றன. உதாரணமாக பாபிலோனுக்கு எதிரான கடுமையான மனநிலை இவரது ஆரம்ப காலகட்டங்களில் இருந்தது. பிந்தைய காலகட்டங்களில் அவர் பாபிலோனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அந்தந்த கால சூழலுக்கு ஏற்ப இவரது வாக்கை இறைவன் பயன்படுத்தியிருந்தார் என புரிந்து கொள்வதே சரியானது.

    இவரது காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு. மனாசேவின் காலத்தில் இவர் பிறந்தார். மனாசே கொடூரமான மன்னன். தனக்கு எதிராக இறைவாக்கு உரைத்தார் எனும் காரணத்துக்காக இறைவாக்கினர் எசாயாவை படுகொலை செய்தவர். தனது சொந்தப் பிள்ளைகளையே நரபலி கொடுத்தவன். இவனது ஆட்சியில் தெருக்களெங்கும் ரத்த வாடை வீசியது. அந்த காலகட்டத்தில் பிறந்த எரேமியா, யூதாவில் முக்கியமான ஏழு மன்னர்களின் அரசாட்சியில் வாழ்ந்தார்.

    எருசலேமிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது இவரது பிறந்த ஊர். பிறக்கும் முன்பே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எரேமியா. தயக்கமும், கோழைத்தனமும், கூச்ச சுபாவமும் கொண்ட இளைஞனாகவே இவரது வாழ்க்கை இருந்தது. பதின் வயதுகளின் பிந்தைய காலகட்டத்தில் அவர் இறைவாக்குரைக்க ஆரம்பித்தார். இவருக்கு ‘அழும் இறைவாக்கினர்’ எனும் பெயருண்டு. மக்களுக்காக இதயத்தில் கடும் துயரை அனுபவித்தவர் அவர்.

    அவரது காலம் கொஞ்சம் சிக்கலானது. வடக்கிலுள்ள இஸ்ரேல் நாடு அசீரியர்களின் கட்டுப்பாட்டில் வந்திருந்த காலம். யூதாவிலும் அத்தகைய ஒரு நிலை வரும் என்பதைக் கடைசியாக உரைத்த இறைவாக்கினர் இவர் தான். ஆபகூக்கு, செப்பனியா, எசேக்கியேல் மற்றும் தானியேல் போன்றவர்களின் காலத்தவர் இவர்.

    குயவன் பானை செய்வதன் மூலமாக இறைவன் எரேமியாவுக்குச் சொன்ன ஆன்மிக பாடம் முக்கியமானது. கடவுள் அவரை குயவனின் இடத்துக்குப் போகச் சொன்னார். எரேமியா சென்று பார்த்தார். அங்கே குயவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தார். கையில் சரியாகச் சுழலாத மண் சரியான பானையாக மாறவில்லை. அதை மீண்டும் தரையில் போட்டார் குயவன்.

    நல்ல பானை உருவாவதும், மோசமான பானை உருவாவதும் குயவனின் கையிலல்ல. மண்ணின் கையில் தான். மண் தன்னை குயவன் கைக்கு முழுமையாய் ஒப்புக் கொடுத்தால் மட்டுமே அழகான பானையாய் உருமாறும். அதுபோல இஸ்ரேல் மக்கள் தங்களை முழுமையாய் இறைவனின் கையில் ஒப்புக்கொடுக்க வேண்டும் என அவர் போதித்தார்.

    அதே போல, சுடப்பட்ட பானை இறுகி விடுகிறது. அதைக் கீழே போட்டு உடைத்த எரேமியா அதன் மூலமும் ஒரு பாடத்தைச் சொன்னார். கடின இதயம் கொண்டவர்களை இறைவன் உடைத்தெறிவார் என்பதே அந்த பாடம்.

    இஸ்ரேல் மக்களை இறைவன் கைகழுவி விடப்போகின்ற கடைசி நாட்களில் கூட ஒரு நம்பிக்கையின் ஒளியாய் அவரது எச்சரிக்கையும், அச்சுறுத்தலும், இறைவாக்கும் இருந்தது.

    எரேமியாவின் எழுத்துகள் கவிதைகளாய் இருக்கின்றன. இறைவன் மக்களிடம் செய்திகளை உரைநடையாகவும், தனது இதயத்தின் உணர்வுகளைக் கவிதையாகவும் சொல்வது வழக்கம். எரேமியாவின் நூலிலும் அந்த அழகியலைக் காணலாம்.

    இவரது நூலில் அழகிய நாடகத்தன்மையும் உண்டு. ஒரு முறை அழுக்கான உள்ளாடை ஒன்றை மண்ணில் புதைத்து வைத்தார். ஏன் என்று கேட்டபோது இது மக்களுடைய அக வாழ்க்கையைக் குறிக்கிறது என்றார். மக்களின் பாவ வாழ்க்கையை ‘பளிச்’ என விளக்க இத்தகைய நாடக பாணி போதனையைப் பின்பற்றினார்.

    வெளிப்படையான ஆன்மிக வாழ்வு பயனற்றது எனவும், இறைவன் தனித் தனியே மக்களை நியாயம் விசாரிப்பார் எனவும், கடவுள் புதிய உடன்படிக்கையைத் தருவார் எனவும் அவர் சொன்ன இறை செய்திகள் அவரை மற்ற அனைத்து இறைவாக்கினர்களிடமிருந்தும் வேறு படுத்துகிறது.

    இறைவனின் தன்மையையும், அன்பையும் ஆழமாகப் புரிந்து கொள்ள எரேமியா நூல் நமக்கு துணை செய்கிறது.

    சேவியர்
    Next Story
    ×