search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைபிள் கூறும் வரலாறு: சங்கீதம் - திருப்பாடல்கள்
    X

    பைபிள் கூறும் வரலாறு: சங்கீதம் - திருப்பாடல்கள்

    கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது.
    “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம். கிறிஸ்தவ ஆன்மிகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல்: திருப்பாடல்கள்.

    கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது. சொல்லப் போனால் ஆதிக்கிறிஸ்தவ போதகர்கள் திருப்பாடல்கள் முழுவதையும் மனப்பாடம் செய்து வைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் என்கிறது இறையியல் வரலாறு.

    மொத்தம் 150 பாடல்கள் கொண்ட இந்த நூலில் 2461 வசனங்களும், 43743 வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன‌. உண்மையில் இது ஐந்து பாடல் புத்தகங்களின் தொகுப்பு. திருப் பாடல்கள் 41,72,89,106,150 ஆகியவையே ஒவ்வொரு நூலின் கடைசிப் பாடல்.

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் சங்கமம் இது. தாவீதின் காலமான கி.மு. 1000-களில் பெரும்பான்மையான பாடல்கள் எழுதப்பட்டன. மோசேயின் காலமான கி.மு. 1300-ல் உள்ள பாடல்களும், கானானை விட்டு இஸ்ரேயலர்கள் வெளியேறி வாழ்ந்த கி.மு. 500-களின் பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

    திருப்பாடல்கள் இசைக்கும் போது நமது இதயத்தையே நாம் ஊடுருவிப் பார்க்கும் சிந்தனை எழுவது இதன் சிறப்பு. சர்வதேசத்துக்கும், சர்வகாலத்துக்கும் பொருந்தக் கூடியவகையில் திருப்பாடல்கள் இருப்பது உண்மையிலேயே வியப்பான விஷயம் தான்.

    எபிரேய மொழியில் இந்த நூல் ‘தெனிலிம்’ என அழைக்கப்படுகிறது. அதற்கு “புகழ்ச்சிப் பாடல்கள்” என்று பொருள். இந்த திருப்பாடல்களை இரண்டாக வகுக்க வேண்டுமெனில், “நான்” என தன்னை மையப் படுத்தி இறைவனைப் புகழும் தனிப்பட்ட பாடல்கள். “நாம்” என குழுவை மையப்படுத்தி இறைவனைப் புகழும் குழுப்பாடல்கள் என வகுக்கலாம்.

    உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருப்பாடல்கள் நிறையவே இந்த நூலில் உண்டு. “உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்” என்பது போன்ற வரிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. பண்டைய யூதர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. யாராவது இறந்து விட்டால், அவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பவர்கள் அதை ஒரு பாட்டிலில் சேமித்து தங்களது இரங்கலாக அனுப்பி வைப்பார்கள். அத்தகைய சமூகப் பழக்கங்கள் திருப்பாடல்களில் எதிரொலிப்பதை ஆங்காங்கே காணலாம்.

    கோபம், எரிச்சல், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளும், மகிழ்ச்சி, களிப்பு, ஆறுதல், நம்பிக்கை, சமாதானம் போன்ற நேர்மறை உணர்வுகளும் திருப்பாடல்களில் நிரம்பியிருக்கின்றன.

    இன்னொரு வகையில் திருப்பாடல்களைப் பிரிக்க வேண்டுமெனில் இறைஞ்சும் பாடல்கள், நன்றிப் பாடல்கள், வருந்தும் பாடல்கள் என பிரிக்கலாம். இதன் ஆன்மிகச் செழுமை காரணமாக மார்டின் லூதர் ‘இது பைபிளுக்கு உள்ளே உள்ள இன்னொரு பைபிள்” என்று குறிப்பிட்டார்.

    இந்த நூலின் மிகச்சிறிய அதிகாரம் 117. அதில் இரண்டே இரண்டு வசனங்கள் உள்ளன. மிகப்பெரிய பாடல் 119. அதில் 176 வசனங்கள் உள்ளன. பொதுவாக எபிரேயப் பாடல்கள் எல்லாமே சத்தமாய் பாடப்பட வேண்டிய பாடல்கள் தான். திருப்பாடல்களும் அதற்கு விதி விலக்கல்ல.

    இந்தத் திருப்பாடல்களில் 73 பாடல்களுக்கு மேல் தாவீது எழுதியிருக்கிறார். தாவீதைத் தவிர ஆஸாப் புதல்வர்கள் பன்னிரண்டு பாடல்கள், மோசே ஒரு பாடல், கோராவின் மகன்கள் பத்து பாடல்கள், ஹெர்மான் ஒரு பாடல், எசேக்கியா பத்து பாடல்கள், ஏதன் ஒரு பாடல், சாலமோன் இரண்டு பாடல்கள் என பங்களிப்பு செய்திருக்கின்றனர்.

    தாவீது மன்னனின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள இந்த பாடல்கள் உதவி புரிகின்றன. பத்சேபாவுடனான உறவுக்குப் பின் மனம் வருந்தி அவர் எழுதிய திருப்பாடல் 51 மிகப்பிரபலம். மொத்தம் பதினான்கு பாடல்கள் தாவீதின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.

    தற்போதைய பாடல்களைப் போலில்லாமல் திருப் பாடல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்படுத்தலாக இருப்பது சிறப்பு. பல பாடல்கள் குறிப்பிட்ட இறை சிந்தனையை நமக்கு விளக்குகின்றன. உதாரணமாக, ‘இறைவார்த்தையைப் படிக்க வேண்டும்’ எனும் சிந்தனையை திருப்பாடல் 119 பதிவு செய்கிறது, ஓய்வு நாளை கடைப்பிடிக்க வேண்டுமென திருப்பாடல் 92 வலியுறுத்துகிறது.

    இறைமகன் இயேசுவின் வாழ்க்கையை தீர்க்க தரிசனமாக உரைக்கும் பல பாடல்கள் திருப்பாடல்களில் உள்ளன‌. மனிதர்களால் இகழப்படுவார், ஆணிகளால் அறையப்படுவார், ஆடைகள் ஏலமிடப்படும், அவரது எலும்புகள் ஏதும் முறிபடாது என இயேசுவின் மரணத்தைக் குறித்தும் மிக விரிவாக இவை பேசு கின்றன.

    இறைவனைப் புகழவும், இறைவனோடு உள்ள உறவை வலுப்படுத்தவும் இன்றும் நமக்கு திருப்பாடல்கள் துணை செய்கின்றன. அற்புதமான இலக்கியச் சுவை, ஆழமான ஆன்மிகச் சுவை என திருப்பாடல்கள் நூல் வாசிக்கும் யாவரையும் வசீகரிக்கிறது.

    சேவியர்.
    Next Story
    ×