
மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக நேற்று வசந்த உற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார்.
நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக வருகிற 15-ந் தேதியன்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெறுகிறது. அன்று இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ மேளதாளத்துடன் கொள்ளிடத்திற்கு சென்று, அங்கிருந்து புனிதநீர் எடுத்து கோவிலுக்கு வரப்படுகிறது.
மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பட்டாச்சாரியார்களும், வடதிருக்காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்து கொண்டு கோவிலுக்கு வருவார்கள். பின்னர் திருமஞ்சனத்துடன் சிறப்பு வேத பாராயணம், வேத மந்திரம் மற்றும் பூஜைகள் செய்து மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடி மரம் 2-வது சுற்று, தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் 3-வது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதி மற்றும் வடக்கு மடவாள வீதியில் 4-வது சுற்று, கீழ ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி 5-வது சுற்று என பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.
உற்சவத்தையொட்டி 23-ந் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இரவு 10 மணியளவில் 14-ந் தேதி ரிஷப வாகனத்திலும், 16-ந் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், 17-ந் தேதி முத்துப்பல்லக்கிலும் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேலும் வருகிற 18-ந் தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந் தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளிக் காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி மரக்கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந் தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந் தேதி மரஅன்னப்பட்சி வாகனத்திலும் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், மேலாளர் ஹரிஹரசுப்ரமணியன், மணியக்காரர் ரமணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.