search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிலுவை மரத்திலிருந்து ஒரு வெற்றி முழக்கம்
    X

    சிலுவை மரத்திலிருந்து ஒரு வெற்றி முழக்கம்

    போரில் வெற்றி பெற்ற வீரன் எல்லாம் முடிந்தது என்று கொண்டாட்டமாய் கூறுவது போல ஆண்டவர் ஏசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்து விட்டது என்று கூறுகிறார்.
    ஆண்டவர் ஏசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30) எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று பொருள் அல்ல, மாறாக அது வெற்றியின் முழக்கம். நாம் நம்முடைய சாதாரண பார்வையில் அது தோல்வியின் குரலாக விரக்தியின் உச்சத்தில் கதறுபவரின் சத்தம் போலத்தான் பார்க்க வேண்டும்.

    அதாவது நான் முயற்சி செய்தேன், ஆனால் தோற்று விட்டேன் என்பது போல தோன்றும். இதற்கு காரணம், உலகை மீட்க வந்த உன்னத தேவன் சிலுவையில் தொங்கிக்கொண்டு இருக்க அவரை கொலை செய்பவர்கள் அவருக்கு முன்பு திடமாக நின்றுகொண்டு அவரை எள்ளி நகையாடிக்கொண்டும், அவரை சிலுவையில் இருந்து இறக்கி வரசொல்லி சவால் விட்டுக்கொண்டும் இருப்பது ஆண்டவர் இயலாமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு உருவாக்கலாம்.

    அவருடைய சீடர்களும் கூட இவ்வாறு தான் பார்த்தார்கள். அவர்கள் நினைத்ததைபோல அவர் செய்யவில்லை என்று கோபமும் விரக்தியும் அடைந்தனர். கசையால் அடிகள் வாங்கி தசைகள் கிழிந்து குருதி வழிந்தோடும நிலையில் சிலுவை மரத்தில் தொங்கிக்கொண்டு எப்படி அவர் வெற்றியின் குரலாக முழங்க முடியும் என்று எண்ணத்தோன்றும். அது வேதனையின் குரல் விரக்தியின் கதறல் என்று தான் பார்க்க தோன்றும்.

    இறைவன்ஏன் இடிமின்னல் கொண்டு தன் மகனை கொலை செய்பவர்களை அழிக்கவில்லை அல்லது இவரே என் அன்பார்த்த மகன் என்று அவர் பணியை தொடங்கியப்போது கூறியவர் இப்போது குரல் கொடுக்கவில்லை என்ற மனித பார்வைகள் எல்லாம் நிறைவேறிற்று என்பதை ஒரு வெற்றியின் குரலாக பார்க்க விடாது. மீட்பின் வரலாற்றோடு விவிலியத்தின் முன்னறிவிப்புகளோடு இறை நம்பிக்கையோடு நாம் அதைப்பொருத்தி பார்த்தால் தான் அது வெற்றயின் முழக்கம் என்பது தெளிவாக தெரியும்.

    போரில் வெற்றி பெற்ற வீரன் எல்லாம் முடிந்தது என்று கொண்டாட்டமாய் கூறுவது போல ஆண்டவர் ஏசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்து விட்டது என்று கூறுகிறார். எல்லாம் நிறைவேறியது ஒரு வெற்றியின் குரல் கீழ்படிதலின் குரல் மற்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் குரல் மனித சமூகத்தின் விடுதலைக்காக எல்லாம் நிறைவேறிற்று. மண்ணகத்தில் போரினை முடித்து விட்டு உன்னருபே வருகின்றேன் தந்தையே என்ற வெற்றியின் முழக்கம். அதனால் தான் நாம் அந்த நாளை புனித வெள்ளி என்று போற்றுகிறோம்.

    அருள்திரு.தேவதாஸ், பங்குத்தந்தை,
    தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.
    Next Story
    ×