search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைபிள் கூறும் வரலாறு: எஸ்தர்
    X

    பைபிள் கூறும் வரலாறு: எஸ்தர்

    இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.
    திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரசியமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு.

    பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்களில் தான் கடவுளின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஒன்று, உன்னத சங்கீதம், இன்னொன்று இந்த எஸ்தர் நூல்.

    வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டு வாழ்ந்த காலத்தில் தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க இது வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே நடந்த கதை தான். அப்படிப்பட்ட களத்தில் அமைந்த பிற நூல்களாக எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களைச் சொல்லலாம்.

    எஸ்தர் நூலின் சாரம்சம் இது தான். அகஸ்வேர் மன்னன் இந்தியா முதல் எகிப்து வரை விரிந்து பரந்த‌ மாபெரும் வலிமையான சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கிறான். தன்னுடைய வீரதீர பராக்கிரமங்களை எல்லோருக்கும் பறைசாற்ற மாபெரும் விருந்தொன்றை அளிக்கிறான். அந்த அரசவையில் அரசி வஸ்தி ஆட வேண்டும் என அழைப்பு விடுக்கிறான்.

    அரசனின் அழைப்பை வஸ்தி நிராகரிக் கிறாள். மன்னனையே மனைவி மதிக்காவிடில் எந்த மனைவி தான் கணவனை மதிப்பாள் என விவாதம் நிகழ்கிறது. வஸ்தி அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறாள். அந்த இடத்துக்கு இன்னொரு இளம் கன்னிப்பெண் தேடப்படுகிறாள்.

    அந்த இடத்தில் மொர்தக்காய் எனும் யூதரிடம் ஆதரவாய் இருக்கும் எஸ்தர் எனும் பெண் வருகிறாள். பல்வேறு தயாரிப்பு நிகழ்வுகளுக்குப் பின் அவள் அரசியாகிறாள். பிற இன நாடு ஒன்றின் அரசியாகிறாள் யூதப் பெண். உண்மை வெளிப்பட்டால் உயிருக்கே ஆபத்து எனும் நிலை.

    மொர்த்தக்காய்க்கு அரச வாயிலில் நிற்கும் பணி. அவரது வளர்ப்பு மகளுக்கு அரசவையின் மிக உயரிய நிலை. அப்போது வருகிறான் வில்லன், ஆமான். அரசனின் உயரதிகாரி. எல்லோரும் அவனுக்கு தலைகுனிந்து வணக்கம் செலுத்துகின்றனர். ‘ஆண்டவரை மட்டுமே வணங்குவேன்’ என மொர்த்தக்காய் வணங்காமல் நிற்கிறார்.

    ஆமானுக்கு சினம் தலைக்கேறுகிறது. மொர்த்தக்காயை மட்டுமல்ல, யூத இனத்தையே ஒட்டு மொத்தமாய் அழிக்க வேண்டும் என திட்டமிடுகிறான். அரசனின் அனுமதியும் பெற்று விடுகிறான். மொர்த்தக்காயைக் கொல்ல மிகப்பெரிய கழுமரத்தையும் உண்டாக்குகிறான்.

    அரசி எஸ்தர் இந்த நிலையை மாற்ற முயல்கிறார். யூதர்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடுகின்றனர். அந்த சூழலில் மொர்த்தக்காய் ஒரு முறை மன்னனை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்வு தெரிய வருகிறது. ஆமானைக் கொண்டே மொர்த்தக்காயை மரியாதை செலுத்த வைக்கிறார் மன்னன்.

    எஸ்தர் அரசி திட்டமிட்டு விருந்தொன்றை உருவாக்கி மன்னனையும், ஆமானையும் அழைக்கிறாள். அந்த விருந்தில் ஆமானின் மீது மன்னனுக்கு கோபம் உருவாகும் சூழலை ஏற்படுத்து கிறாள். ஆமான், மொர்த்தக்காய்க்காய் தான் உருவாக்கிய கழுமரத்தில் உயிர் விடுகிறான்.

    இந்தக் கதையின் முழுமையான சுவாரசியத்தைப் பெற்றுக்கொள்ள எஸ்தர் நூலை ஒரு முறை வாசித்தாலே போதும்.

    கடவுள் எப்படி சூழல்களை தமக்குப் பிரியமானவர்களுக்குச் சாதகமாக மாற்றுகிறார் என்பது வியப்பூட்டும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை மட்டுமே வணங்கவேண்டும் எனும் மனநிலை கொண்ட மன்னன், கடைசியில் யூதர்கள் மீது யாரும் கை வைக்கக் கூடாது என மாறுகிறார்.

    எதேச்சையாக நடப்பதைப் போல நடக்கின்ற விஷயங்கள் உண்மையில் இறைவன் உருவாக்குகின்ற சூழல்கள் என்பதை நாம் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம். எல்லாம் சுமுகமாக மாற ஒரு எதேச்சையான நிகழ்வு தான் காரணம்.

    ஒரு இரவில் மன்னனுக்கு தூக்கம் வரவில்லை. அவர் குறிப்பேட்டை வாசிக்கிறார். தனது உயிரை மொர்த்தக்காய் காப்பாற்றியதை அறிகிறார். அவரை கவுரவிக்க விரும்புகிறார். அந்த தூக்கமற்ற ஒரு இரவு தான் யூதர்களை ஒட்டு மொத்தமாய்க் காப்பாற்றியது.

    மோசேயின் காலத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாம் படுகொலை செய்யப்பட மோசே ஒரு கூடையில் வைக்கப்பட்டு நதியில் மிதக்க விடப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

    பெத்லேகேமில் இயேசு பிறந்த போது, பாலகர்களை எல்லாம் படுகொலை செய்ய அரசன் ஆணையிட்டான். இயேசு, இரவில் ஒரு கனவின் மூலம் காப்பாற்றப்பட்டார். எஸ்தர் கதையில் யூத இனத்தை தூக்கமற்ற ஒரு கனவு காப்பாற்றுகிறது.

    இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே இருக்கும் நாம் உண்மையும், இறையச்சமும் உடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதையும், கடவுள் தனிநபர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவார் என்பதையும் இந்த நூல் நமக்குப் பாடமாகத் தருகிறது.

    சேவியர்
    Next Story
    ×