search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உலகெங்கும் ஈஸ்டர் கொண்டாட்டம்: இன்றும் வாழும் உயிர்த்த இயேசு
    X

    உலகெங்கும் ஈஸ்டர் கொண்டாட்டம்: இன்றும் வாழும் உயிர்த்த இயேசு

    ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிப்பார்கள். மக்களுக்காக உயிர் விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்காக காத்திருப்பார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று நிகழ்வாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

    ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு கொடுத்ததற்காக, நீதியை நிலைநாட்ட தூண்டியதற்காக, ஏழைகளை வாழவைத்ததற்காக, பாவிகளை மன்னித்ததற்காக, பிணிகளை போக்கியதற்காக, உண்மைகளை பேசியதற்காக இயேசு கொல்லப்பட்டார். அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையில் இருந்து உயிரோடு வெளியே வந்தார். நம்மோடே இருக்கிறார்.

    உயிர்ப்பின் சாட்சி

    கிறிஸ்து உயிர்ப்பெற்றெழுந்த காட்சியை பார்த்தவர்கள் யாருமில்லை.. உயிர்ப்புக் காட்சியைப் பார்த்த ஒரே சாட்சி இரவு என்று திருச்சபை சொல்கிறது. எனவே தான் பாஸ்கா புகழுரையை குருவானவர் பாடும்போது “ஓ... மெய்யாகவே பாக்கியம் பெற்ற இரவே, கிறிஸ்து பாதாளத்திலிருந்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்” என்று அந்த இரவை புகழ்ந்து பாடுகிறார்.

    இயேசுவின் உடல் திருடப்படவில்லை

    இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது. அவரது உடல் எங்கே? கயவர்கள் அவரது உடல் திருட்டு போய் விட்டு என்று கதை கட்டினார்கள். ஆனால் அவரது உடல் திருடப்படவில்லை. மாறாக உயிர்த்தெழுந்தது. இயேசுவின் உடலை சுற்றியிருந்த துணிகளும் தலையைச் சுற்றியிருந்த துண்டும் கல்லறையில் கிடந்ததாக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவின் உடலை திருடியிருந்தால் உடலை சுற்றியிருந்த துணிகளையும் திருடியிருப்பார்கள். துணிகளை திருடாவிட்டால் கூட அவற்றை அலங்கோலமாய்ப் போட்டிருப்பார்கள். ஆனால் இங்கு துணிகள் எல்லாம் ஒழுங்கான நிலையில் இருந்ததாக நற்செய்தி கூறுவது அவரது உயிர்ப்பை உறுதியாக்குகிறது.

    இயேசுவின் உயிர்ப்பும் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பும்:

    எகிப்திய புராணத்தில் பீனிக்ஸ் என்ற ஒரு பறவை வருகின்றது. இந்தப் பறவை உயிரோடு இருக்கிறபோது தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளாது. மாறாக அதன் இனம் பெருகுவது அந்த பறவையின் இறப்பிற்குப் பின் தான். பீனிக்ஸ் பறவை இறந்து மண்ணில் மடிந்து மட்கிப் போகும்போது அது புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவைகள் உருவாகுமாம். அதுபோல கிறிஸ்தவ மதம் இயேசுவின் காலத்தில் உருவானதல்ல. கிறிஸ்தவ மதம் உருவாகி பெருகியது அவரது உயிர்த்தெழுதலின் பிறகுதான். கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால், கல்லறையோடு அவரது கதை முடிந்திருந்தால் கிறிஸ்தவ மதம் இல்லை. எனவே கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பு.

    உயிர்த்த இயேசுவைப் பார்த்த முதல் பெண் - மதலேன் மரியா:

    யூத முறைப்படி இறந்த உடலை அடக்கம் செய்யும்போது நறுமண பொருட்களால் அவ்வுடல் பூசப்படவேண்டும். இயேசு இறந்தது வெள்ளிக்கிழமை மாலை. ஓய்வு நாள். அதாவது சனிக்கிழமை வெள்ளி மாலையில் ஆரம்பமாகிறது. ஆனால் யூதமுறைப்படி மாலையும், பகலும் சேர்ந்து தான் ஒருநாள். இதைத்தான் தொடக்க நூலில் படைப்பின்போது “மாலையும், காலையும் சேர்ந்து முதல் நாள் ஆயிற்று” (ஆதி.1:5) என்று படிக்கிறோம்.

    எனவே ஓய்வு நாள் ஆரம்பமானதால் இயேசுவின் இறுதிச்சடங்கை சரியாக செய்ய முடியாமல் அவசர, அவசரமாக கல்லறையில் புதைத்து விட்டார்கள். இயேசுவின் மீது அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் வாரத்தின் முதல்நாள் விடியலுக்காக காத்திருந்து அதிகாலையிலே நறுமண பொருட்களுடன் கல்லறைக்குச் சென்றார்கள். அவரது உடலை எடுத்து தகுந்த மரியாதையோடு, பரிமளத்தைலம் பூசி சிறப்பான விதத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக கல்லறை அருகில் வரும்போது தான் காலியான கல்லறையைப் பார்த்து திகைத்துப் போயினர்.

    இயேசுவின் உடல் அங்கே இல்லாததால் மற்றவர்கள் எல்லோரும் போய் விட்டனர். ஆனால் மதலேன் மரியாள் மாத்திரம் எப்படியாவது இயேசுவின் உடலைத் தேடி கண்டுபிடித்து, செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்க வேண்டும் என்று தனிமையில் கல்லறை அருகில் அழுதுகொண்டே இருக்கும்போது தான் உயிர்த்த இயேசுவை முதன்முறையாக பார்க்கின்ற பாக்கியம் மதலேன் மரியாளுக்குக் கிடைத்தது. மனம் திரும்பிய பாவிப்பெண்ணுக்கு கிடைத்த இந்த பேறு, மனந்திரும்பும் ஒவ்வொருவரும் இயேசுவைக் காண்பர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    சாட்சிகளை உருவாக்க பல காட்சிகள்:

    உயிர்த்தெழுந்த இயேசு இன்னும் நம்மை சிலுவையில் அறைந்தோ அல்லது கல்லால் எறிந்தோ கொன்று விடுவார்கள் என்று பயந்து தலைமறைவாக இருக்க விரும்பவில்லை. பலருக்கு காட்சி கொடுக்கின்றார். ஆண்களுக்கு, பெண்களுக்கு, சீடர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு என்று பல தரப்பட்ட மக்களுக்கு காட்சி கொடுக்கின்றார். இந்தக் காட்சிகள் எதற்காக? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளை உருவாக்க. உயிர்த்த
    இயேசுவை காட்சியில் கண்டவர்கள் எல்லாம் சாட்சியாக மாறினர்.

    சீடர்களிடத்தில் இயேசு உண்டாக்கிய மாற்றமும் உயிர்ப்புக்கு சாட்சியாக மாறுகின்றது. படைவீரர்களுக்கு பயந்து ஓடியவர்கள் வீதிக்கு வந்து உயிரைப் பணயம் வைத்து இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகிர்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு சீடர்கள் இயேசுவுக்கு நிகராகவோ, அவரை விட பெரியவராகவோ யாரையும் அவர்கள் கருதவில்லை. இயேசு மட்டுமே அவர்களது மூச்சு. ஊருக்கு அஞ்சியவர்கள் நடுத்தெருவில் நின்று போதித்தார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவனை அழித்து விடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த சவுலுக்கு உயிர்த்த இயேசு காட்சி அளித்து “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.பணி. 9:5) என்று கூறியவுடன் மனமாற்றம் பெற்று கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுக்கவும் துணிந்து கிறிஸ்துவின் உன்னத சாட்சியாக மாறினார்.



    உயிர்த்த கிறிஸ்து கட்டுவோர் விலக்கிய மூலைக்கல்:

    பழைய ஏற்பாட்டில் சூசை எல்லோராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சிறையில் வீசப்பட்டு, எகிப்தியர்களுக்கு விற்கப்பட்டு “இவன் வேண்டாம்” என்று அப்புறப்படுத்திய சூசையிடம் இறுதியில் யாரை வெறுத்து தள்ளினார்களோ அந்த சூசையிடம் உணவிற்காக கையேந்தி நின்றது போல “இவன் வேண்டாம், இவனை சிலுவையில் அறையும்” என்று எல்லோராலும் வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இயேசு இன்று எல்லோருக்கும் வாழ்வளிக்கும் வள்ளலாக உயிர்த்தெழுந்தது கட்டுவோர் விலக்கிய கல் மூலைக்கல்லாக மாறும் என்ற இறைவார்த்தையை உண்மையென நிரூபித்துக் காட்டுகிறது.

    இறந்தும் வாழும் இயேசு

    இறந்த இயேசு இன்றும் என்றும் வாழ்கிறார். இயேசு இன்று நினைவில் வாழ்பவர் அல்ல, உண்மையாகவே வாழ்கிறார். இறந்தவர்கள் மக்களின் எண்ணத்தில், நினைவில் வாழலாம். தொடர்ந்து கடைபிடிக்கப்படும் தம் போதனைகளின் வழி வாழலாம். ஆனால் இறந்த இயேசுவின் வாழ்வு என்பது எண்ணத்திலும், நினைவிலும், கொள்கையிலும் அவர் வாழ்கிறார் என்பதன்று, அவர் உண்மையில் உயிர் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்கிறார். இயேசு வெறும் நினைவிலோ, கொள்கையிலோ அல்ல. மாறாக உண்மையிலே உயிர் வாழ்கிறார் என்பதை வலியுறுத்தத்தான் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் அவர் உடலோடு உயிர் பெற்றெழுந்தார் என்பதை மீண்டும் மீண்டும் அறுதியிட்டு கூறினர்.

    எனினும் சாவுக்கு முன்னிருந்த இயேசுவின் அதே உடல் அப்படியே இருந்தது எனக் கூற முடியாது. உயிர்த்த இயேசு காலம், இடம் ஆகியவற்றை கடந்து நிற்கிறார். அடைபட்டிருந்த அறைக்குள் அவரால் நுழைய முடிந்தது. யூதேயாவிலும், கலிலேயாவிலும் பலருக்கு ஒரே காலத்தில் காட்சியளிக்க முடிந்தது. இவ்வாறு உயிர்த்த இயேசுவின் உடல் திருத்தூதர் பவுல் கூறுவது போல “அழியாதது, மாண்புரிக்குரியது. வலிமையுள்ளது. ஆவிக்குரியது”- (1 கொரி. 15: 42).

    உயிர்த்தெழுதலும் திருச்சபையின் அழியாத் தன்மையும்:

    உயிர்த்த இயேசு இனி சாகமாட்டார். அவர் என்றும் வாழ்பவர். திருச்சபையின் தலைவர் இயேசு கிறிஸ்து. திருச்சபையையும், இயேசு வையும் பிரிக்க முடியாது. அழிவில்லாத உயிர்த்த கிறிஸ்து திருச்சபையின் தலைவராக இருக்கும் வரை திருச்சபைக்கு அழிவில்லை. திருச்சபையின் உடலாகிய கிறிஸ்தவர்கள் அழிந்தாலும் அதன் தலையாகிய கிறிஸ்து அழியாதவராக இருக்கிறார். எனவே தான் இயேசுவின் உயிர்ப்பு திருச்சபையின் அழியாத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.

    இயேசு மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு ‘வித்து’. வித்து முளைத்து வாழ்வதுபோல் உயிர்த்த கிறிஸ்து இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று கூறிய இயேசு உயிர்த்து இன்று நம்மோடே வாழ்கிறார். நம்மில் வாழ்கிறார்.  குறிப்பாக ஏழை, எளியவரோடும், துன்ப துயரம் அடைந்தோரோடும், கடைநிலையில் இருப்பாரோடும் வாழ்கிறார்.

    வதைக்கப்பட்டோரோடும், நோயுற்றோரோடும், அன்னியராக்கப்பட்டோ ரோடும், அடிமைப்படுத்தப்பட்டோரோடும் வாழ்கிறார். ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
    Next Story
    ×