search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: கடைசி நேரத்தில் பாவ மன்னிப்பு பெற்ற திருடன்
    X

    தவக்கால சிந்தனை: கடைசி நேரத்தில் பாவ மன்னிப்பு பெற்ற திருடன்

    தவக்கால நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.
    இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தைதான் ‘புனித வெள்ளி’ என்று கூறுகின்ற னர். இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கிய போது ஏழு வார்த்தைகளை அவர் கூறுகிறார். அந்த வார்த்தைகள் குறித்து தியானிக்கலாம். பொதுவாக நம்முடைய குழந்தைகள் தவறு செய்தால், ஏதோ தெரியாமல் குழந்தை செய்து விட்டது மன்னித்து விடு என்று கூறுவோம். அதே போல தான் சிலுவையில் அறைந்தவர்களை இயேசுவும் மன்னித்தார். ஆனாலும் சிறு குழந்தை செய்தால் தெரியாமல் செய்து விட்டது என்று கூறலாம். ஆனால் ரோம நாட்டின் அதிகாரிகளும், யூத மக்களும் தானே இயேசுவை கொலை செய்ய சிலுவையில் அறைந்தார்கள். இவர்களை என்ன விவரம் தெரியாதா? என்று நம் ஒவ்வொருவருடைய மனதிலும் கேள்வி எழும்பலாம்.

    உண்மை என்னவென்றால், இருளின் சக்திகள் இந்த மனிதர்களுடைய கண்களை குருடாக்கி, தங்களுடைய இருதயத்தை கடினப்படுத்தி, சுயபுத்தியின் படி செய்யவில்லை. இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. எனவே தான் இயேசு சிலுவையில் தொங்கியபடி முதலாம் வார்த்தையாக, ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ (லூக்கா:23-34). என்று கூறுகிறார்.

    இயேசு சிலுவையில் தொங்கிய போது அவருக்கு வலதுபுறம் ஒரு திருடனையும், இடதுபுறம் ஒரு திருடனையும் அறைந்திருந் தனர். அப்போது ஒரு திருடன் வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தவன். ஆனால் அவன் கடைசி நேரத்திலும் கூட இயேசுவை பார்த்து நீர் கிறிஸ்துவானால் இந்த மரணத்திலிருந்து உன்னையும், எங்களையும் இரட்சிக்க முடியுமோ? என்று கூறி இயேசுவை இகழ்ந்து பேசுகிறான். இப்படித்தான் நாமும் இந்த உலகத்தில் கடைசி நேரத்திலும் கூட கடவுளை பார்த்து கேள்வி கேட்கிறவர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மற்றொரு திருடனோ இயேசு நல்லவர், இவருக்கு ஏன் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது , இயேசு குற்றவாளியாக மரிக்கவில்லை. இந்த மனுக்குலத்தின் பாவத்தை போக்கவே மரிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, இயேசுவை இகழ்ந்து பேசிய திருடனை பார்த்து நீ வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்து விட்டு இந்த கடைசி நேரத்திலும் கூட தேவனுக்கு பயப்படுகிறது இல்லையா? என்று கேட்கிறான். மேலும் இயேசுவை பார்த்து ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று கூறுகிறான். இவன் இப்படி கடைசி நேரத்தில் தன் பாவங்களை உணர்ந்து இயேசுவிடம் மன்னிப்பை பெற்றுக்கொண்டான்.

    எனவே தான் இயேசு சிலுவையிலே இரண்டாம் வார்த்தையாக ‘இன்றைக்கு நீ என்னுடனே கூட பர லோகத்தில் இருப்பாய்’ (லுக்கா: 23-43) என்று கூறுகிறார். ஆம் தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனந்திரும்பாமல் இயேசுவை இகழ்ந்து பேசும் திருடனைப்போலவா? அல்லது கடைசி நேரத்தில் தன் பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்றவனை போலவா? என்று சிந்தித்து பார்க்க கடமைப்பட்ட வர்களாய் இருக்கிறோம். எனவே இந்த நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.

    சகோதரி: சா.சுமங்கலா பீட்டர், காங்கேயம்
    Next Story
    ×