search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: நல்லதை புரிந்து கொள்ளவில்லையே
    X

    தவக்கால சிந்தனை: நல்லதை புரிந்து கொள்ளவில்லையே

    “உன்னுடைய கருத்துக்கள் எத்தனை பேருக்கு பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”
    “என் சொல்லைக்கேட்டு கிரேத்தா தீவை விட்டு புறப்படாமல் இருக்க வேண்டியதாய் இருந்தது...”-அப்போஸ்தலர் 27:21.

    நாம் நல்லதை நினைத்தே சொல்கிறோம். நல்ல கருத்தையே கூறுகிறோம். ஆனாலும் அதனை கேட்பவருக்கு அது நல்லதாகவும், நல்ல கருத்தாகவும் இருக்கும் என்று கூறமுடியாது. நம்மால் நல்லதாக பார்க்க முடிந்தவைகளை எல்லாம் பிறராலும் அவ்விதமாவே பார்க்க முடியும் என கூறிவிட முடியாது. எனவே நாம் சொல்லுகின்ற நல்ல கருத்துகளை, கொடுக்கின்ற நல்ல ஆலோசனைகளை மற்றவர்களின் மனம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஒரு பக்குவநிலை வரும் வரை நாம் சாந்தமான ஒரு மனநிலையுடன் பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.

    பல நேரங்களில் நாம் கொடுத்த நல்ல ஆலோசனைகளை மற்றவர்கள் உடனேயே அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு கோபமும், அதிருப்தியும் வந்துவிடுகிறதல்லவா? நல்லதை புரிந்து கொள்ளாத அவர்களின் மனநிலை நமக்கு வெறுப்பூட்டுகிறதல்லவா? எனவே அவர்களை கடிந்து கொள்ளவும், கண்டனம் பண்ணவும் அவசரப்படுகிறோம்.

    இல்லையேல் இனி இவர்களிடம் நல்லதை பேசவும் கூடாது. இவர்களுக்காக நல்லதை நினைக்கவும் கூடாது என்று முடிவெடுக்கக்கூட விரைந்துவிடுகிறோம். ஆனால் அது தவறல்லவா? குழந்தையின் ஆரோக்கியத்திற்காக தாய் அதனை குளிப்பாட்டினால் அது அழுகிறது. அழுக்கில் விளையாடாதே என்றால் அழுகிறது. ஒரு நாள் குழந்தை வளர்ந்து ஏற்ற வயதுகளில் வரும்போது தாய்க்கு எதிர்ப்பு காட்டிய விஷயங்களை எல்லாம், தானாக விரும்பி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆம். காலங்கள் நல்ல கருத்துகளின் நியாயங்களை புரிந்துகொள்ளும் பக்குவமான மனநிலையை தருகிறது.

    ரோமாபுரியை நோக்கி கப்பல் பயணம் செய்த அப்போஸ்தலனாகிய பவுல் நல்லதென்று கண்டு கொடுத்த நல்ல எச்சரிப்புகளையும், ஆலோசனைகளையும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவன் கடைசிவரை கப்பலில் பயணம் செய்தோரின் நலனுக்காக தொடர்ந்து பிரயாசப்பட தயங்கவில்லை. ஆம். நல்லதை பிறர் புரிந்துகொள்ள தாமதம் ஆனாலும் பொறுமையாக இருப்போமாக.

    “உன்னுடைய கருத்துக்கள் எத்தனை பேருக்கு பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”

    -சாம்சன் பால்
    Next Story
    ×