search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்
    X

    ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்

    கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
    இறைமகன் இயேசுகிறிஸ்து தன் சீடர்களிடம் ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ (யோவான் 13:34) என்கிறார்.

    ஆண்டவர் இயேசுகிறிஸ்து, கடவுள் மானிடர் மீது காட்டிய அன்பின் வடிவம் அவர். அன்பின் வழியில் வாழ்ந்தவர். தம் சீடர்களையும் அதே நல்வழியில் வாழ பயிற்றுவித்தவர்.

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அன்பு

    1. அனைத்திலும் முதன்மையான கட்டளை அன்பு: இறைமகன் இயேசுகிறிஸ்து தம்மை அணுகி வந்து, ‘அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?’ என்று கேட்ட மறைநூல் அறிஞரிடம், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. இவற்றை விட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை’ என்றார். (மாற்கு 12:29-31)

    2. உயிரைக் கொடுக்கும் அன்பே பெரிதானது: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடத்திலுமில்லை என்கிறார். (யோவான் 15:13)

    3. அன்பு செலுத்துபவரே என் சீடர்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் என்றார். (யோவான் 13:35)

    4. அனைத்து காணிக்கைகளிலும் உயர்ந்தது அன்பு: இறைமகன் இயேசு தம்மை சுற்றியிருந்த திரளான மக்களிடம், ‘நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’ என்றார். (மத்தேயு 5:23,24)

    5. பகைவரிடத்திலும் வெளிப்படுத்த வேண்டியது அன்பு: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் என்கிறார். (லூக்கா 6:34)

    இறைமகன் இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட அன்பு

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து வார்த்தையிலும், போதனையிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

    துரோகம் செய்தவரிடம் அன்பை காட்டினார்: தம் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசு ஆண்டவர் இயேசுவினிடம் வந்து, ‘ரபி வாழ்க’ என்று சொல்லி அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த பொழுது, அவர் யூதாசிடம், ‘தோழா, எதற்காக வந்தாய்?’ என்று அதே மாறாத பாசப்பிணைப்புடனே அழைக்கின்றார். (மத்தேயு 26:50)

    கைது செய்ய வந்தவரிடமும் அன்பை வெளிப்படுத்தினார்: யூத சமய குருக்களும், மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் ஆண்டவர் இயேசுவைக் கைது செய்ய வந்த பொழுது, அவரோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக்காதைத் துண்டித்தார். அப்பொழுது ஆண்டவர் அவர்களைப் பார்த்து, ‘விடுங்கள் போதும்’ என்று கூறி அந்த பணியாளரின் காதைத்தொட்டு நலமாக்கினார்.

    தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்த ஆண்டவரின் அன்பு: ஆண்டவர் இயேசுவைப் பிடித்து அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரைப் பழித் துரைத்தார்கள், காரி உமிழ்ந்தார்கள், சாட்டையால் அடித்தார்கள், முள் முடி சூட்டினார்கள். இறுதியாக சிலுவையிலே அறைந்தார்கள். அப்போது இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றார்.

    கிரேக்கத்தில் ‘அன்பு’

    மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு ஆகும். பண்டைய கிரேக்க அறிஞர்கள் ஆறு விதமான அன்பை அடையாளம் கண்டனர். அவை:

    1. பிலியா: உடன்பிறப்புகள், நண்பர்களிடையே இருக்கும் அன்பு

    2. எராஸ்: கணவன்-மனைவி இடையேயான அன்பு

    3. ஸ்டார்கே: பெற்றோர் பிள்ளைகளிடையிலான அன்பு

    4. ப்ரக்மா: உறவினர்களிடத்தில் காட்டுகின்ற அன்பு

    5. பிலௌவ்டியா: தன் மீது காட்டும் தன்னலம் சார்ந்த அன்பு

    6. அகப்பே: இயல் நிலைக் கடந்த தெய்வீக அன்பு, கடவுள் மனிதர்கள் மீது காட்டிய அன்பு. ஆண்டவர் இயேசுவும் மனிதரிடம் காட்டிய அன்பும் இதுவே. இந்த தெய்வீக அன்பு மனிதரில் உருவாகும் இயல்பான அன்பல்ல. இது ஆவியார் மூலமாக மனிதருக்குக் கடவுள் கொடுக்கும் அருட்கொடையிது. இந்த அன்பிற்கு நிகர் எதுவுமில்லை. எதையும் எதிர்பாராதது. எவ்வித நிபந்தனையுமற்றது.

    நாமும் பிறரை அன்புசெய்ய கடமைப்பட்டிருக்கிறோம்

    ‘அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்’ என்கிறார் மகாத்மா காந்தியடிகள். அன்பு இறைமையோடுத் தொடர்புடையது. ஆதலால் கடவுள் அன்பாகவே இருக்கிறார். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    அருட்கொடையாம் வாழ்வை இறை அன்பாலே வாழ்ந்து காட்டுவோம்!

    அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    Next Story
    ×