search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: சிலுவை ஒரு ஏணி
    X

    தவக்கால சிந்தனை: சிலுவை ஒரு ஏணி

    சிலுவையில் சுயம் அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மீக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.
    தன் சிலுவையை எடுத்து கொண்டு என்னை பின்பற்ற கடவன் ( மத்தேயு 10:38 )

    சிலுவை சுமத்தல் என்பது ஒரு முழுமையான அர்ப்பணிப்பிற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் அனுபவமாகும். இந்த அனுபவமாகிய சிலுவையை தினமும் சுமந்தவர்களாக இயேசுவை பின்பற்றினால் தான், அவரால் நமக்கு ஆயத்தமாக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நாம் அடையமுடியும். ஏனென்றால் சிலுவை சுமந்து இயேசு உருவாக்கிய மேன்மையான ஆசீர்வாதங்களை நாமும் சிலுவை சுமக்க முன்வருவதின் மூலமாக தான் அடைய முடியும். சிலுவைதான் ஆசீர்வாதத்தின் உண்மையான ஏணியாக உள்ளது. இந்த ஏணி வழியாக ஏறிச்செல்லும் சிரமத்தை ஏற்கவிரும்பாதோர் கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களை அடையும் வாய்ப்பு இல்லை.

    அநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர். நன்றாக தேவ வாக்குறுதிகளை நினைவு கூர்ந்து உரிமையோடு கிறிஸ்துவிடம் கேட்கின்றனர். ஆயினும் அவர்களின் வாழ்க்கையில் தேவஆசீர்வாதங்கள் இல்லை. ஏனென்றால் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசித்தாலும், சிலுவையாகிய சரியான அனுதின அர்ப்பணிப்பின் பாதையில் நடக்க மனதை ஆயத்தப்படுத்தாவிடில் ஆசீர்வாதப்பாதை நமக்கு அடைக்கப்பட்டதாகவே இருக்கும்.

    சிலர் எவ்வளவு கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்ந்தாலும் தங்களை பழைய நிலையிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். ஜெபித்தாலும், துதித்தாலும், ஊழியம் செய்தாலும் தாங்களோ அந்த பழைய மனிதனாகவே உள்ளனர். ஜென்ம சுபாவ இயல்புகள் போதுமான அளவு சிலுவையில் அறையப்படவில்லை. சுயத்தின் சாயல் செயல்களிலும், குணங்களிலும் தெரிகிறது. அர்ப்பணிப்பு என்பதும் சிலுவை சுமத்தல் என்பதும் எவ்வளவு ஜெபிக்கிறீர்கள், எப்படி ஆராதிக்கின்றீர்கள், எவ்வளவு ஊழியம் செய்கின்றீர்கள் என்பவைகளால் கணக்கிடப் படத்தக்கவை அல்ல.

    குணம், சுபாவம், இயல்பு ஆகியவை எந்த அளவிற்கு தேவசாயலாக மாறியிருக்கின்றது என்பதின் அடிப்படையிலேயே சிலுவை எந்த அளவு நம்முடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதை அறிய முடியும்.

    ஆம். சிலுவை உபதேசத்தை ஏற்காதவரை ஆசீர்வாதங்கள் தூரமாகவே இருக்கும். சிலுவையில் சுயம் அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மீக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.

    - சாம்சன் பால்
    Next Story
    ×