search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: உபவாச நாட்கள்
    X

    தவக்கால சிந்தனை: உபவாச நாட்கள்

    லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் நாளில் இருந்து ஈஸ்டர் எனப்படும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் வரை உள்ள நாட்களை உள்ளடக்கியது ஆகும்.
    லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் நாளில் இருந்து ஈஸ்டர் எனப்படும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் வரை உள்ள நாட்களை உள்ளடக்கியது ஆகும். சாம்பல் புதன் முதல் ஈஸ்டர் வரை 46 நாட்கள் வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த நாள் என்பதினால் இடைப்பட்ட 6 ஞாயிற்றுக்கிழமைகள் வந்தாலும் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மீதமுள்ள 40 நாட்கள் உபவாச நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. லெந்து காலம் என்பதற்கு வசந்த காலம் என்று பொருள்.

    எபிரேய வருட கணக்குப்படி சேபாத் (சக:1:7), ஆதார் (எஸ்:3:7), நிசான் (நெகே:2:1) மாதங்களும், ஆங்கில வருட கணக்குப்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களும், தமிழ் மாத கணக்குப்படி மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களும் வசந்த காலமாக கணக்கிடப்படுகிறது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலை பெற்ற அன்று பஸ்கா பண்டிகையை முதன்முறையாக ஆசரித்தனர். முதல் பஸ்கா நாளானது முழு நிலவு நாளாக இருந்தது. (இஸ்ரவேலரின் எல்லா பண்டிகைகளுமே நிலவை மையமாக வைத்தே கணக்கிடப்படுகிறது. ஏனெனில் நிலவை மையமாக கொண்ட ஆண்டை பின்பற்றினார்கள்.

    பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வாரத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வாரத்தின் கடைசி நாளாகவும், ஓய்வு நாளாகவும் (யூதர்களுக்கு) இருந்தது. அடுத்த வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கி.பி.125-ம் ஆண்டின் நைஸியா கூட்டத்தின் தீர்மானத்தின்படி தான் ஈஸ்டர் பண்டிகை கணக்கிடப்படுகிறது.

    அன்று முதல் மார்ச் மாதத்தில் 21-ந் தேதிக்கு பின்வருகிற முழு நிலவு நாளுக்கு அடுத்த ஞாயிறு தான் உயிர்த்தெழுந்த பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிலும் மார்ச் 21-ந் தேதிக்கு பின்வரும் முழு நிலவானது ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வருகிறது. ஏப்ரல் 19-ந் தேதி புனித வெள்ளியாகவும், முழு நிலவு நாளுக்கு அடுத்த ஞாயிறு அதாவது ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு என்று கொண்டாடப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு தினத்திற்கு 40 நாட்களுக்கு முந்தைய புதன் கிழமை சாம்பல் புதன் என அனுசரிக்கப்பட்டு அன்று முதல் லெந்து நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூறுதலான நாளாய் இருக்கக்கடவது. அதை கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக. அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள் (யாத்:12:14). பஸ்கா பண்டிகையைக் குறித்து ஆண்டவர் சொல்லும்போது அதை தலைமுறை தலைமுறையாக நினைவுகூரும்படியாக சொல்லியிருந்தார்.

    ஒரு வேளை பழைய ஏற்பாடு பஸ்காவானது இஸ்ரவேலருக்கானதாக இருக்கலாம். ஆனால் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் இதை அனுசரிக்க வேண்டும் என்றும் பரிசுத்த வேதாகமம் நமக்கு பதிலளிக்கிறது. நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. (1கொரி:5:7). நமக்காக பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவை நினைவுகூர்ந்து இந்த லெந்து காலத்தில் நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்ள, தேவனை அண்டிக்கொள்ள ஆண்டவர் நமக்கு கிருபை தருவாராக.

    போதகர்.அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை.திருப்பூர்

    Next Story
    ×