search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிராகா நகர் குழந்தை இயேசு
    X

    பிராகா நகர் குழந்தை இயேசு

    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.

    வரலாறு

    1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.

    குழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

    1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், "எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.

    இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.

    இன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.

    முற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல்லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[2]

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன. 
    Next Story
    ×