search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித பெரிய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா
    X

    புனித பெரிய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

    வேடசந்தூர் அருகே மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயத்தின் பெருவிழாவையொட்டி புனிதர்களின் பெரிய தேர் பவனி நடந்தது.
    வேடசந்தூர் அருகே மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று புனிதர்களின் பெரிய தேர் பவனி நடந்தது. முன்னதாக கடந்த 16-ந் தேதி மாலை மதுரை உயர் மறைவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் வாண வேடிக்கையுடன் புனிதரின் ஆடம்பரக் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா தொடங்கியது.

    மறுநாள் காலை திருவிருந்து திருப்பலியும், மாலை 6 மணிக்கு மேல் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் ஆடம்பர கூட்டுதிருப்பலி நடந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு கிராமிய தெம்மாங்கு கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலையில் திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணிமைய செயலர் சாம்சன் ஆரோக்கியதாஸ் தலைமையில் தேரடித்திருப்பலி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது. பின்னர் மாலை புனித பெரிய அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, புனித ராயப்பர், சிறிய அந்தோணியார், புனித வானதூதர் ஆகிய புனிதர்களின் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இத்திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரும் தங்களின் வேண்டுதலுக்காக தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், புனித பெரிய அந்தோணியாருக்கு மாலை அணிவித்தும் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மை குரு மற்றும் திருத்தலப் பங்குத்தந்தை எஸ்.அமலதாஸ் தலைமையில் உதவி பங்குத்தந்தை எம்.ஜஸ்டின் திரவியம், பெரியதனக்காரர்கள், அமலவைக்கன்னியர்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×