search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்மைக்காக்கும் தெய்வம்
    X

    நம்மைக்காக்கும் தெய்வம்

    பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)
    இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் மீட்பிற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெத்லகேமில் மனிதனாக பிறந்தார். இப்பூவுலக மாந்தர்கள் சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ்வதற்காகவும் நித்திய ஜீவனை, அதாவது பரலோக வாழ்வை அளிப்பதற்காகவுமே அவர் வந்தார்.

    அவருடைய இளமை பருவத்தை நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்து, பின்னர் கலிலேயா, தீரு, சீதோன் போன்ற அநேக பட்டணங்களில் சொற்பொழிவு ஆற்றினார். ஜனங்களை நோயிலிருந்து சுகமாக்கி, பிசாசினால் பாதிக்கப்பட்டவரை விடுதலையாக்கி அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.

    எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. இந்த குளத்தை சுற்றி குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் படுத்திருப்பார்கள். அவர்கள் எப்பொழுது தண்ணீர் கலங்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

    ஏனெனில் சில சமயங்களில் தேவ தூதன் ஒருவன் வந்து அந்த குளத்தில் இறங்கி தண்ணீரை கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் குணமடைவான்.

    முப்பத்தெட்டு வருஷம் வியாதியஸ்தனாய் இருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு சொஸ்தமாக வேண்டும் என்று விரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன், ‘ஆண்டவரே, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுவதற்கு ஒருவருமில்லை. நான் குளத்திற்குள் இறங்குவதற்கு முன் வேறொருவன் இறங்கி சுகமாகி விடுகிறான்’ என்றான்.

    இயேசு அவனை நோக்கி, ‘எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்து கொண்டு போனான் என்று வேதாகமம் கூறுகிறது.

    இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார். (திருவிவிலியம், யோவான்-5:8,9).

    இவனை சுற்றிலும் வாழ்ந்த மனிதர்கள் சுயநலம் மிகுந்தவர்களாய் இருந்தனர். இவனுடைய கஷ்டத்தையும், கண்ணீரையும், வேதனையையும் கண்டும் ஒருவனுக்கும் உதவி செய்ய மனதில்லாதிருந்தது. ஆனால் இயேசு அவன் மேல் மனதுருகுகிறார். அவனை சொஸ்தமாக்க சித்தம் கொள்கிறார்.

    இன்றைக்கும் சுயநலமான மனிதர்கள் தான் பெரும்பாலும் நம்மை சுற்றி வாழ்கின்றனர். உதவி செய்யும் மனப்பான்மை, இரக்கம் காட்டும் மனப்பான்மை மனுக்குலத்தில் குறைந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்களும் ஜீவிக்கின்றீர்களா? ஐயோ எனக்கு உதவி செய்ய, என்னை கை தூக்கி விட, ஒருவருமே இல்லையென்று கலங்குகிறீர்களா?

    கவலைப்படாதிருங்கள், உங்களுக்கு உதவி செய்ய, உங்கள் துயரம் நீக்க, உங்களைக் கை தூக்கி விட ஒருவர் இருக்கிறார். அவர் நாமம் இயேசு. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

    இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபிரேயர் 13:8).

    “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார் (எபிரேயர் 13:5).

    அன்று கேட்பாரற்று, விசாரிப்பாரற்று கிடந்த ஒரு மனிதனைத் தேடிப்போய் அவனை விசாரித்து அவனுக்கு நன்மை செய்தவர் இன்றைக்கும் உங்களுக்கு அப்படியே செய்வார்.

    மனிதர்கள் கை விட்டு விட்ட கலக்கத்தில் துயரத்தில் ஜீவிக்கின்றீர்களோ இயேசு நிச்சயமாக கைவிட மாட்டார். அவர் உங்களுக்கு நன்மை செய்வார்.

    எப்படி அந்த குளக்கரை வியாதியஸ்தன் தன் சூழ்நிலைகளை இயேசுவிடம் சொன்னானோ, அதுபோல நீங்களும் உங்கள் மனதின் கவலைகளை பாரங்களை இயேசுகிறிஸ்துவிடம் தெரிவியுங்கள். நிச்சயமாய் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

    உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

    பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    சகோ. சி. சதீஷ், வால்பாறை.
    Next Story
    ×