search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விடுதலைப் பயணம்
    X

    விடுதலைப் பயணம்

    ‘விடுதலைப்பயணம்’ நூல் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாகவும், இறையியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விவிலியத்தில் வருகின்ற இரண்டாவது நூல் ‘விடுதலைப் பயணம்’ அல்லது ‘யாத்திராகமம்’ என அழைக்கப்படுகிறது.

    ‘எக்ஸோடோஸ்’ எனும் கிரேக்க வார்த்தையில் இருந்து இது உருவானது. இதற்கு ‘வெளியேறுதல்’ என்று பொருள்.

    இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாகி, எகிப்தை விட்டு ‘வெளியேறுதலே’ இந்த நூலின் அடிப்படைச்செய்தி என்பதால் இதற்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.

    விவிலியத்தின் முதல் நூல் மனுக்குல வரலாற்றின் சுமார் 2000 வருடங்களைப் பதிவு செய்கிறது. அதன் பின் முன்னூறு ஆண்டுகள் இடைவெளி. அந்த காலகட்டத்தில் நடந்தது என்ன என்பதை விவிலியம் பதிவு செய்யவில்லை. அதன் பின்னர் மோசேயின் கதை வருகிறது, விடுதலைப்பயணத்தில்.

    விடுதலைப் பயணத்தை எழுதியவரும் ‘மோசே’ தான். முதல் நூலில், அவர் பிறப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளோடு முன்பு முடிவு பெற்ற விஷயங்களை எழுதியிருந்தார். இந்த நூலிலும் அதற்குப் பின் அவர் எழுதிய மூன்று விவிலிய நூல்களிலும் நேரடி அனுபவ விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

    கடவுளால் ‘இஸ்ரயேல்’ என பெயரிடப்பட்ட யாக்கோபு எகிப்தில் குடியேறுகிறார். சுமார் 70-75 பேராக முதலில் எகிப்தில் நுழைந்த அவர்கள் 430 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் வளர்கிறார்கள்.

    இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6 லட்சம் பேர். பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் சேர்த்தால் சுமார் 20 லட்சம் வரை வரலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதன் காலம் கி.மு. 1800-கி.மு. 1400 எனலாம்.

    யோசேப்பு இறந்தபின், அரசுகள் மாறிய பின், இஸ்ரயேல் மக்களின் சுதந்திர வாழ்க்கை களவாடப்பட்டது. அவர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டார்கள். எனவே தான் அவர்களுக்கு அங்கிருந்து விடுதலை தேவைப்பட்டது.

    ‘கடவுளை வழிபடவேண்டும்’ எனும் கோரிக்கையோடு அவர்களை மீட்க கடவுளால் அனுப்பப்பட்டவர் தான் மோசே. அவரோடு துணைக்கு வந்தவர் ஆரோன்.

    மோசே முதலில் எகிப்திய இளவரசி ஹெட்சிபாவால் தண்ணீரிலிருந்து கண்டெடுக்கப்பட்டவர். சுமார் நாற்பது ஆண்டுகள் அரசவையில் ஒரு அரசனைப் போல வளர்கிறார்.

    ‘தான் எகிப்தியர் அல்ல, எபிரேயர்’ எனும் உண்மை புரிந்ததும் தன் இன மக்களின் விடுதலைக்காக போராட நினைக்கிறார். ஆனால் அவரால் அது முடியவில்லை.

    எனவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். அரண்மனையை விட்டு வெளியேறி நாற்பது ஆண்டுகள் மீதியான் எனும் இடத்தில் வாழ்கிறார்.

    அதன் பின் கடவுளால் எகிப்துக்கு அனுப்பப்படுகிறார் மோசே, அப்போது அவருக்கு வயது 80.

    மோசே சென்று தனது இன மக்களை விடுவிக்குமாறு அரசரிடம் விண்ணப்பிக்கிறார். மன்னன் நகைக்கிறான், மறுக்கிறான்.

    அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக பத்து வாதைகள் எகிப்திய நாட்டை சூறையாடுகின்றன. கடைசி வாதையில் எகிப்தியர்களின் தலைச்சன் பிள்ளைகள் இறந்துபோகின்றனர். வேறு வழியில்லாமல் மன்னன் அடிமைகளை வெளியே அனுப்பி விடுகிறான்.

    மாபெரும் கூட்டமாக இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து கால்நடைகள், பொருட்கள், செல்வங்கள் எல்லாவற்றோடும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

    சுமார் நாற்பது ஆண்டுகள் அவர்கள் பாலை நிலத்தில் நடக்கின்றனர். அவர்களை மோசே வழிநடத்துகிறார். பாலை நிலத்தில் கடவுள் பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்து மக்களைக் காக்கின்றார்.

    நாற்பது ஆண்டுகள் அவர்களுக்கு ‘மன்னா’ எனும் உணவை வழங்கினார், இறைச்சிக்கு காடைகளை வழங்கினார். ஏன் நாற்பது ஆண்டுகளும் அவர்களுடைய காலணிகள் கூட அறுந்து போகாமல் பாதுகாத்தார்.

    மனித வாழ்க்கையை நெறிப்படுத்த இறைவனிடமிருந்து நேரடியாக பத்து கட்டளைகளைப் பெற்று மக்களுக்கு வழங்குகிறார் மோசே. அதைத் தவிரவும் மோசே ஏகப்பட்ட சட்டதிட்டங்களை இறையருளால் வகுத்து மக்களுக்கு வழங்குகிறார்.

    இந்த நூலில் கடவுள் தனது பெயரையும், தனது இயல்புகளையும், அவரது சட்டங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். தன்னை மக்கள் எப்படி வணங்கவேண்டும் எனும் வழிமுறைகளையும் இந்த நூலில் தான் இறைவன் வெளிப்படுத்துகிறார். எனவே இந்த நூல் இறையியல் ஆய்வுக்கு அடிப்படையான நூலாக அமைந்து விடுகிறது.

    விடுதலைப் பயண நூலின் நிகழ்ச்சிகள் இயேசுவின் வாழ்க்கையின் நிழலாக இருக்கின்றன. ‘பாஸ்கா’ எனும் விழாவில் ஒரு வயது நிரம்பிய ஆட்டுக்கடா பலி கொடுக்கப்பட்டது. அது முப்பது வயதான இயேசுவின் மரண பலியை குறிக்கிறது. ஆடானது பிற்பகல் மூன்று மணியளவில் வெட்டப்பட வேண்டும். அது இயேசுவின் மரண நேரத்தைக் குறிக்கிறது.

    எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாம் நாள் செங்கடலைக் கடந்து முழு விடுதலை பெறுகின்றனர். அது இறைமகன் இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கிறது.

    ஐம்பதாவது நாளில் மலையில் சட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். அது இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஐம்பதாவது நாளில் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் பெந்தேகோஸ்தே நாளை குறிக்கிறது.

    ‘விடுதலைப்பயணம்’ நூல் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாகவும், இறையியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும் அமைகிறது. 
    Next Story
    ×