search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவை சோதித்த சாத்தான்
    X

    இயேசுவை சோதித்த சாத்தான்

    சாத்தானின் சோதனையை வென்று கடவுளின் திட்டத்துக்கு முற்றிலும் தம்மைக் கையளித்ததால், இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று நிரூபித்தார்.
    கிறிஸ்தவ சமயத்தில் ஒருவர் திரு முழுக்கு (ஞான ஸ்நானம்) பெறுகின்ற வேளையில், “சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டு விடுகிறீர்களா?” என்று குருவானவர் கேட்பது வழக்கம். இந்த வழக்கம் தோன்றியதன் பின்னணியில், இறை மகன் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று உள்ளது. அதுதான் இயேசுவை சாத்தான் சோதித்த நிகழ்ச்சி.

    ‘இயேசு திருமுழுக்கு பெற்றதும் பாலைநிலத்தில் நாற்பது நாள் இருந்தார். அப்போது அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார்’ என்று மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி நூல்களில் காண்கிறோம். “அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு தோன்றினார்” (1 யோவான் 3:8) என்று கூறும் அதே விவிலியத்தில், இத்தகைய நிகழ்வு சொல்லப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பைத் தருகிறது.

    இயேசு இறைமகன் என்றால், அலகை (சாத்தான்) அவரை சோதிப்பது சாத்தியமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சாத்தானால் சோதிக்கப்பட்டார் என்றால், இயேசுவை இறைமகன் என்று ஏற்க முடியுமா என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், கடவுளுக்கு எதிராக மனிதரை செயல்படத் தூண்டுவதே சாத்தானின் வேலை என்பது நமக்குத் தெரியும். ஆகவே, மானிட மகனாகத் தோன்றிய இயேசுவையும் சாத்தான் சோதித்துப் பார்த்தது.

    “இறைமகனாகிய இயேசு எல்லா வகையிலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர்” (எபிரேயர் 4:15) என்று விவிலியம் கூறுகிறது. இந்த உண்மையின் உருவகமாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்ட நிகழ்வு அமைந்துள்ளது. இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு மனப் போராட்டங்களை அவர் எப்படி வெற்றி கொண்டார் என்பதை நாம் இந்நிகழ்வின் வழியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    இயேசு ‘இறைமகன்’ என்பதற்கு, தந்தையாம் கடவுள் சான்று பகர்ந்த பிறகு, அலகை அவரை சோதிக்கிறது. இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் நோன்புஇருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அலகையின் பேச்சைக் கேட்டு, கல்லை அப்பமாக மாற்றி தம்மை இறைமகன் என்று இயேசு நிரூபித் திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

    இயேசு மறுமொழியாக, ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என மறைநூலில் எழுதியுள்ளதே’ என்றார். (மத்தேயு 4:2-4).

    ‘கடவுளின் பிள்ளைகள், உணவுக்காக சாத்தானின் பேச்சைக் கேட்க வேண்டியதில்லை’ என்பதே இயேசுவின் பதிலடி. ‘கடவுளின் வார்த்தையாகிய தம்மாலேயே மனிதருக்கு வாழ்வு கிடைக்கும்’ என்று கூறி சாத்தான் மீது இயேசு வெற்றி கொள்கிறார்.

    இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற் படுத்தின. ‘அப்பங்களைப் பெருகச்செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த வேளையில், இயேசுவை அரசராக்க யூதர்கள் முயற்சி செய்தாலும் அவர் விலகிச் சென்றார்’ (யோவான் 6:15) என்று வாசிக்கிறோம். தமது மகிமைக்காக அல்லாமல், மக்களின் நலனுக்காகவே அற்புதங்களைச் செய்து இயேசு சோதனையை வென்றார்.

    இரண்டாவது சோதனைக்காக, சாத்தான் அவரை எருசலேம் நகரத்திற்குக் கூட்டிச் சென்றது. “கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும். கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று சாத்தான் அவரிடம் சொன்னது.

    இங்கு இயேசுவின் மீட்புச் செயலைத் தடுப்பதற்காக, அவரை தற்கொலை செய்யுமாறு அலகை தூண்டுகிறது. இயேசு அதனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளதே’ என்று சொன்னார் (மத்தேயு 4:5-7).

    ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என இங்கு இயேசு பயன்படுத்தும் வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல. ஆண்டவராகியத் தம்மை சோதிக்க சாத்தானுக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்த்தும் விதத்தில் அவர் இப்படி கூறினார்.

    இயேசுவின் அதிகாரத்தை விமர்சித்து, அடையாளச் செயல்களை செய்து காட்டுமாறு கேட்ட பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற யூத சமயத் தலைவர் களுக்கு பதிலாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. ‘தேவையான நேரத்தில் கடவுள் அற்புதம் செய்வார் என்றாலும், அதிசயம் நிகழும் என நம்பி கடவுளை சோதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது’ என்று கூறி சாத்தானை வெல்கிறார் இயேசு.

    மூன்றாவதாக, சாத்தான் அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ‘நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என்றது.

    இங்கு, அதிகாரமும் பதவியும் பெறுவதற்காக தன்னை வணங்குமாறு சாத்தான் சோதிக்கிறது.

    அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார் (மத்தேயு 4:8-10).

    அதாவது, இறைமகனாகிய தாம் அலகையின் காலில் விழுவது நடக்காத காரியம் என்று சொல்லி, இயேசு அலகையை விரட்டி விடுகிறார். இயேசுவை விட்டு அலகை அகன்றதும், வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். (மத்தேயு 4:11)

    இயேசுவின் இறைத்தன்மையின் மேன்மையைக் கண்ட சீடர்கள், அவர் உலகு சார்ந்த ஓர் அரசை அமைக்கப்போவதாக எண்ணினர். அவரது அரசாங்கத்தில் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்துடனே பலர் அவரது சீடர் களாக இருந்தனர். யூதர்களில் பலருக்கும் இத்தகைய எண்ணம் இருந்தது. ஆகவேதான் இயேசு எருசலேமில் நுழைந்தபோது, “ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக” (லூக்கா 19:38) என்று மக்கள் ஆர்ப் பரித்தனர்.

    ஆனால், சிலுவை சாவை ஏற்கும் தமது லட்சியத்தில் இருந்து இயேசு விலகவில்லை. “ஆண்டவரே, சிலுவை உமக்கு வேண்டாம்” என பரிந்துரைத்த பேதுருவிடம், “அப்பாலே போ சாத்தானே” என்று இயேசு கூறினார். “கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி மனிதராகத் தோன்றினார். சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்” (பிலிப்பியர் 2:6-8) என்ற வார்த்தைகள் இயேசுவின் மேன்மையை எடுத்துரைக்கின்றன.

    இவ்வாறு சாத்தானின் சோதனையை வென்று கடவுளின் திட்டத்துக்கு முற்றிலும் தம்மைக் கையளித்ததால், இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று நிரூபித்தார்.

    “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத்தேயு 16:24) என்றும் அவர் அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று சோதனைகளை வென்று வாழ்ந்தால், நாமும் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும்.

    டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
    Next Story
    ×