search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கர்த்தருக்குச் சித்தமானது உங்கள் குடும்பத்தில் வாய்க்கும்
    X

    கர்த்தருக்குச் சித்தமானது உங்கள் குடும்பத்தில் வாய்க்கும்

    அன்பான தேவ பிள்ளைகளே, நம் ஆண்டவர் நமக்கென்று ஒரு சித்தம், திட்டத்தை வைத்திருக்கிறார். நாம் ஜெபத்தோடு காத்திருக்கும்போது நிச்சயம் ஆண்டவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.
    பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் நம் குடும்ப காரியங்கள், தேவைகள் ஆகியவற்றுக்காக அதிகமாக ஜெபிக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் பதில் கிடைப்பதில்லையே என கலங்குகிறோம்.

    ‘கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்’. (ஏசா.53:10)

    மேற்கண்ட வசனத்தை வாசித்துப் பாருங்கள். கர்த்தருடைய சித்தத்தை ஆண்டவர் நிச்சயம் நிறைவேற்றுவார். அப்படியானால் அவருக்குச் சித்தமில்லாத காரியங்களை அவர் வாய்க்கப் பண்ண மாட்டார்.

    வேதம் சொல்லுகிறது, ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. (I யோவான் 5:14).

    எனவே அவருடைய சித்தத்தின்படி ஜெபித்தால் நிச்சயம் அற்புதம் நடக்கும்.

    தேவ சித்தம் அறிய ஜெபம்

    ஆதியாகமம் 24:12-14 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பார்ப்பீர்களேயானால், ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடிக்கொண்டு வர எலியேசரை அனுப்புகிறார். அப்பொழுது எலியேசர் தன் எஜமானின் குமாரனுடைய வாழ்வில் தேவசித்தம் நிறைவேற வேண்டும். தன் காரியத்தை கர்த்தர் வாய்க்கப் பண்ண வேண்டும் என்பதற்காக தேவசித்தத்தை அறிய ஒரு ஜெபம் ஏறெடுக்கிறதை நாம் காணலாம்.

    பிரியமானவர்களே, உங்கள் எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் திருமணம், வேலை, படிப்பு காரியங்களில் அற்புதத்தை எதிர்நோக்கியிருக்கிற இந்நாட்களில், முதலாவது நம் வாழ்வில் தேவசித்தம் என்ன என்பதை அறிய ஜெபிக்க வேண்டும்.

    ஆண்டவரிடமிருந்து ஒரு அடையாளத்தைக் கேட்கலாம், கர்த்தரின் சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தும்படி ஜெபிக்கலாம். இப்படி ஜெபிக்கும் போது, அவரே தம் சித்தத்தை வெளிப்படுத்தி, காரியங்களை வாய்க்கப் பண்ணுவார்.

    தேவ சித்தம் நிறைவேற காத்திருக்க வேண்டும்

    ‘அந்த மனிதன் அவளைக் குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பயணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்’. (ஆதி.24:21)

    பிரியமானவர்களே, எலியேசர் தேவசித்தத்தை அறிய ஜெபம் பண்ணியபடியே காரியங்கள் நடந்தாலும், அவர் அவசரப்படாமல், அது தேவசித்தம் தானா என்பதை அறியும்படி காத்திருந்தான்.

    ஆனால் இன்று அநேகருக்கு காத்திருக்க பொறுமையில்லை. அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். அது முடிவில் ஏமாற்றத்திலும் பிரச்சினையிலும் கொண்டு போய்விடும்.

    ஆகவே பொறுமையோடு தேவசித்தம் நிறைவேற காத்திருங்கள். கண்டிப்பாக உங்கள் நம்பிக்கை வீண்போகாது. அன்பான தேவ பிள்ளைகளே, நம் ஆண்டவர் நமக்கென்று ஒரு சித்தம், திட்டத்தை வைத்திருக்கிறார். நாம் ஜெபத்தோடு காத்திருக்கும்போது நிச்சயம் ஆண்டவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார். உங்கள் குடும்ப வாழ்வில் அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    Next Story
    ×