search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றி தரும் தேவன்
    X

    வெற்றி தரும் தேவன்

    உங்கள் ஊழியத்திற்கும் விரோதமாய் எழும்புகிற எல்லா ஆவிகளையும், சத்துருவின் கிரியைகளையும் முறியடித்து ஜெயத்தோடு ஓட ஆண்டவர் நிச்சயம் கிருபை பாராட்டுவார்.
    ‘என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது’. சங்.23:5

    இந்த உலகத்திலே நமக்கு இருக்கிற ஒரே எதிரி சாத்தான் தான். அவன் தான் பலவிதங்களில் பலவிதமான மனுஷர்கள் மூலமாக கிரியை செய்து யுத்தங்களையும், சண்டைகளையும், வேதனைகளையும் கொண்டு வருகிறான்.

    ஆனால் இன்றும் கூட நம் குடும்ப வாழ்விலும், வேலை ஸ்தலத்திலும், ஊழியப்பாதையிலும் பலவித குழப்பங்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தி நம்மை அலைக்கழிக்கிற எல்லாவிதமான சத்துருவின் கிரியைகளையும் தேவன் முறியடித்து நம் வாழ்விலே ஜெயத்தைக் கட்டளையிட வல்லவராயிருக்கிறார்.

    குடும்ப வாழ்வில்...

    பிசாசின் முக்கிய குறிக்கோளே குடும்பங்களைப் பிரிப்பது ஆகும். ஆதியில் ஏவாளுக்குள் நுழைந்து அவள் மூலமாய் அந்த குடும்பத்திற்குள் சாபத்தைக் கொண்டு வந்தான். இன்றைக்கும் சண்டைகள், வாக்குவாதங்கள், வியாதிகள், தரித்திரங்கள், கடன் பிரச்சினைகள், குழந்தை இல்லாமை... போன்ற போராட்டங்களைக் கொண்டு வந்து நம் குடும்பத்திலே குழப்பங்களையும், வேதனைகளையும் கொண்டு வரப்பார்ப்பான். தேவ பிள்ளைகள் அவனுடைய தந்திரங்களை அறிந்து செயல்பட வேண்டும்.

    தேவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதமே குடும்ப வாழ்க்கை தான். எனவே கவனமாயிருங்கள். வீணான வார்த்தை, கோபம், ஞானமற்ற நடத்தை, பொறாமை, பெருமை, மேட்டிமை, கோள் சொல்லுதல், கசப்பு, வைராக்கியம், பண ஆசை... இதுபோன்ற பிசாசின் செயல்களுக்கு இடம் கொடுத்து உங்கள் குடும்ப வாழ்வு பாதிக்க சாத்தானுக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.

    ஆவிக்குரிய வாழ்வில்...

    ‘பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்’. யோவான் 8:34

    ஆவிக்குரிய வாழ்வில் பரிசுத்தமாய் வாழ விடாதபடி தடுப்பதே பிசாசின் தலையாய நோக்கம். தேவனுக்கும் நமக்கும் பிரிவினையை உண்டாக்கி தேவனோடு உள்ள உறவை எப்படியாகிலும் பிரிக்கப்பார்ப்பான். ஜெபிக்க விடாதபடி, வேதத்தை வாசிக்க விடாதபடி சோர்வுகளையும், உலகக் கவலைகளையும் கொண்டு வரப்பார்ப்பான். அப்பொழுதே புரிந்து கொள்ளுங்கள் பிசாசின் தந்திரங்களை. உடனே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, விழித்திருந்து ஜெபம் பண்ணி அவனை எதிர்த்து நில்லுங்கள். (I பேதுரு 5:8,9) அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

    நம் தேவன் பரலோக வாழ்வுக்கென்று நம்மைத் தேர்ந்தெடுத்திருக்க, நாம் ஏன் நித்திய நரகத்தை சுதந்தரிக்க வேண்டும்? எனவே ஒருநாளும் பிசாசு நம்மை வஞ்சிக்க இடம் கொடாதிருங்கள். உபவாசமிருந்து, ஜெபம் பண்ணுங்கள். சத்துருவின் கிரியைகள் அழிக்கப்படுவது நிச்சயம்.

    ஊழியப்பாதையில்...

    ஒரு காலத்தில் தேவனுக்காக வல்லமையாகப் பிரகாசித்த அநேக தேவமனிதர்களை சாத்தான் இன்று வஞ்சித்து, சோர்வையும், பெலவீனத்தையும் கொண்டுவந்து, உலக ஆசை, செல்வம் இவற்றால் பரிசுத்தத்தைக் கெடுத்து தேவனுக்காக எழும்பவிடாதபடி முடக்கி வைத்திருக்கிறான். ஆகவே ஊழியம் செய்கிற தேவபிள்ளைகளே, எந்த விதத்திலாவது சாத்தான் நுழையாதபடி ஜெபத்தினாலும், அபிஷேகத்தினாலும் நிரம்பியிருங்கள். தேவனுக்காக வைராக்கியத்தோடு எழும்புங்கள். சாத்தான் நம்மை மேற்கொள்ளவே முடியாது.

    எனவே தூக்கம், கர்த்தருடைய ஊழியத்தில் அசதி, வீண் பேச்சு, மற்ற ஊழியர்களோடு ஒப்பிடுவது, காணிக்கையே குறிக்கோள், சோர்வு, பெலவீனம், குடும்பப் பிரச்சினை, இச்சை, பொருளாசை... போன்ற சாத்தானின் ஆயுதங்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றை மேற்கொள்ள தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்.

    ‘நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்’. எபே.6:11

    வானத்திலிருந்து அக்னியையும் மழையையும் இறக்கி, வைராக்கியமாய் ஆண்டவருக்காக ஊழியம் செய்த எலியாவையே யேசபேலின் ஆவி சோர்வுக்குள்ளாக்கவில்லையா? அவரை ஆண்டவர் தட்டி எழுப்பி, அவர் செய்து முடிக்க வேண்டிய ஊழியத்தை அவரை வைத்தே செய்து முடித்து அக்னி ரதம் மூலம் மகிமையான முடிவை கொடுத்தாரல்லவா?

    உங்கள் ஊழியத்திற்கும் விரோதமாய் எழும்புகிற எல்லா ஆவிகளையும், சத்துருவின் கிரியைகளையும் முறியடித்து ஜெயத்தோடு ஓட ஆண்டவர் நிச்சயம் கிருபை பாராட்டுவார்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54
    Next Story
    ×