search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் உவமைகள்: விதையின் கதை
    X

    இயேசுவின் உவமைகள்: விதையின் கதை

    நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது.
    இயேசு வாழ்ந்த காலத்தில் நிறைய விஷயங்களை உவமைகளாகப் போதித்தார். இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும்.

    “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது”. (மார்க் 4:26-29)

    விதை, இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது.

    விதை இருப்பது அவசியம்

    விதைக்க வேண்டுமெனில் முதல் தேவை, கைவசம் விதைகள் இருப்பது. இன்று இறைவார்த்தை பைபிள் வழியாக நமக்கு எளிதாகக் கிடைக்கிறது. இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே இறைவார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.

    விதைத்தல் அவசியம்

    விதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது. அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.

    நிலங்கள் அவசியம்

    விதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை. எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

    கற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை.

    காலம் அவசியம்

    விதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மூடத்தனம். விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும். அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

    கட்டாயப்படுத்த முடியாது

    சீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும். நம்முடைய அழுத்தங்கள் விதைகளையும், நிலத்தையும் பாழ்படுத்தலாமே தவிர எந்த பயனையும் செய்யாது.

    விதை முளைப்பது தெரிவதில்லை

    எந்தக்கணத்தின் விதையின் தோடுடைத்து முதல் வேர் வெளிக்கிளம்பியது?, எந்தக்கணத்தில் மண்ணைக் கீறி முளை வெளியே வந்தது?.... யாரும் அறிவதில்லை. இறைவன் ஒருவரே அதை அறிகிறார்.

    எனவே இறைவார்த்தைகளை நாம் விதைத்தபின் அது எப்போது முளைக்கும் என்பது இறைவனின் சித்தத்தையும், நிலத்தின் தன்மையையும் பொறுத்தது மட்டுமே.

    மூன்று நிலைகள்

    முளையாக, கதிராக, கதிருக்குள் தானியமாக என மூன்று நிலைகளில் விதைகளின் வளர்ச்சி இருக்கும். முளையாக இருப்பது வார்த்தைகளைக் கேட்டு அதை கொஞ்சமாய் வெளிப்படுத்துவது. ஆனால் அந்த முளையினால் பிறருக்கு எந்த பயனும் இல்லை.

    இரண்டாவது கதிர். கதிர் பார்வைக்கு பயனளிப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் எதுவும் இருக்காது. ஒருவகையில் வெளிவேடமான வாழ்க்கை என சொல்லலாம். வார்த்தைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொள்வதுடன் நின்று விடும். பயனளிக்கும் அந்த கடைசி நிலையை எட்டாமல் போய்விடும்.

    மூன்றாவது தானியம் நிரம்பிய கதிர். இது தான் கடைசி நிலை. இது தான் தேவையான நிலை. உள்ளுக்குள் முழுமை யடைந்து பிறருக்கு பயனளிக்கும் நிலை.

    பயனளிப்பது நிலம்

    விதைகளை நிலத்தில் போடுகிறோம். விதை தானே பயனளிக்க வேண்டும்? இங்கே நிலம் பயனளிக்கிறது. இறைவனின் வார்த்தைகள் விழுந்த மனிதர்கள் தான் பயனளிக்கத் தொடங்குகிறார்கள். வார்த்தைகள் இருக்கும் இதயங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதைப் பிரதிபலித்து பயனளிக்கின்றனர். நமது இதயமெனும் நிலத்தை கவனமாய் பாதுகாப்போம்.

    அறுவடை பயன்

    மனங்கள் பயனளிக்க ஆரம்பிக்கும் போது அந்த விதைகளை விதைத்தவர்கள் பயனடைகின்றனர். நமது இதயமெனும் நிலம் பண்படும் போது அந்த பயன் நமக்குக் கிடைக்கிறது.

    தூய ஆவியெனும் விதை

    நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது. தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது இதயத்தைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    -சேவியர், சென்னை.
    Next Story
    ×