search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர் கல்லறையை பூக்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்வதை படத்தில் காணலாம்.
    X
    கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர் கல்லறையை பூக்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்வதை படத்தில் காணலாம்.

    கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். திண்டுக்கல் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இதையொட்டி அன்றைய நாளில் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, அவர்கள் விரும்பி உண்ணும் உணவை படைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி திண்டுக்கல்-திருச்சி ரோடு கல்லறை தோட்டத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தன.

    இதையொட்டி நேற்று முன்தினம் கல்லறை தோட்டம் முழுவதும் புற்கள், செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கல்லறை தோட்டத்துக்கு வருகை தந்தனர். அவர்கள், தங்களது முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து உணவு படைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக கூட்டுத்திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஸ்டான்லி ராபின்சன் உள்பட பாதிரியார்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினர்.

    அதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம், குமரன் திருநகர் உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் கல்லறைத்திருவிழா கூட்டுத்திருப்பலி அந்தந்த பங்குதந்தைகள் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானலில், வத்தலக்குண்டு சாலை கல்லறைத் தோட்டத்தில், கல்லறைத் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களின் கல்லறைககளில் மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து பிரார்த்தனை செய்தனர். இதில் வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ், பங்குத்தந்தைகள் பீட்டர்சகாயராஜா, அடைக்கலராஜ், ஏஞ்சல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செந்துறையில் கல்லறைத்திருநாள் நடந்தது. இதில் செந்துறை புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தைகள் ஆரோக்கியம், ஜான் ஜெயபால், பிரிட்டோ ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
    Next Story
    ×