search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவிகள் திருந்த வேண்டும்
    X

    பாவிகள் திருந்த வேண்டும்

    எவரிடம் பாவமில்லை. மனிதர்கள் பாவத்தை, அறிந்தும் அறியாமலும் செய்கிறார்கள். எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. பாவிகளை ரட்சிக்கவே மனுமகன் இந்த உலகில் தோன்றினார்.
    இயேசு பிரான் இவ்வுலகில் போதித்த காலத்தில், வரி வாங்குவோரும், பாவிகளும் அவர் சொல்வதைக் கேட்க அவரை நெருங்கி வந்தார்கள். இதைக் கவனித்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இவர் பாவிகளை வரவேற்கிறார்; அவர்களோடு உணவருந்துகிறார். இது எப்படி? என்று தங்களுக்குள்ளேயே முணுமுணுத்தனர்.

    அப்பொழுது அவர் அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:

    ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மகன்களில் இளையவர், தன் தந்தையிடம், 'அப்பா! சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்' என்று கேட்டார். இதனால் தந்தை சொத்தைப் பகிர்ந்து அளித்தார். எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு தொலைதூரத்திற்கு நீண்ட பயணம் மேற்கொண்டார். அங்கு தாறுமாறாக வாழ்ந்து, வாங்கிச் சென்ற சொத்துகளைப் பாழாக்கினார். எல்லாவற்றையும் செலவு செய்தார்.

    பின்பு அவர் சென்ற நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அவர் வறுமையில் வாடினார். வேறு வழி தெரியவில்லை. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம், அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்ப்பதற்குத் தன் வயலுக்கு அனுப்பினார். அவர் பன்றிகளுக்கு வைக்கப்படும் தவிடுகளைத் தின்று, தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள விரும்பினார். அதை அவருக்குக் கொடுப்பதற்குக்கூட ஆள் இல்லை. பிறகு அவருக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்டது.

    என் தந்தை வீட்டில் கூலி வேலை செய்பவர்களுக்குக் கூட தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கும். நான் இங்கு பசியால் செத்துக் கொண்டிருக்கிறேனே! நான் உடனே புறப்பட்டு என் தந்தையிடம் சென்று, என்னை கூலியாளாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.

    உடனே தந்தையிடம் சென்றார். தொலைதூரத்தில் தன் மகன் வருவதைப் பார்த்த தந்தை அவர் மேல் இரக்கம் கொண்டு ஓடிப்போய், ஆரத்தழுவி மகனை முத்தமிட்டார். மகனோ அவரிடம், அப்பா! இறைவனுக்கும் உமக்கும் எதிராகப் பாவம் செய்தேன். நான் இனிமேல் உங்கள் மகனாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன் என்றார்.

    தந்தை அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தம் பணியாளரிடம், முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். மகிழ்ந்து விருந்து வைப்போம். ஏனென்றால் என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போன மகன் திரும்பவும் கிடைத்துள்ளான் என்றார். மகிழ்ச்சியுடன் அனைவரும் விருந்துண்ண தொடங்கினார்கள்.

    வயலில் இருந்து மூத்த மகன் வீட்டை நெருங்கி வரும்போது ஆடல் பாடல்களைக் கேட்டார். பணியாளர்களில் ஒருவரை அழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று கேட்டார்.

    உம் தம்பி வந்திருக்கிறார். அவர் நம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால், உம் தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார் என்றார்.
    கோபம் கொண்ட மூத்த மகன், உள்ளே செல்ல மனம் இல்லாமல், அங்கேயே நின்றார். அவருடைய தந்தை வெளியே வந்து, உள்ளே வரும்படி கெஞ்சிக் கேட்டார்.

    அதற்கு அவர், 'இத்தனை ஆண்டுகளாக, அடிமை போன்று உங்களுக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை என்றுமே மீறியதில்லை. இருப்பினும் என் நண்பர்களோடு நான் மகிழ்ந்து கொண்டாட, ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட, எனக்குத் தந்ததில்லை. ஆனால் உம் சொத்துகளை எல்லாம் அழித்து விட்டு வந்த உம் மகனுக்காகக் கொழுத்த கன்றை அடித்து விருந்துண்ணுகிறீரே?' என்று கேட்டார்.

    அதற்குத் தந்தையார், மூத்த மகனை நோக்கி, மகனே! நீ எப்போதும் என்னிடம் இருக்கிறாய். என்னுடையது அனைத்தும் உன்னுடையதே! இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். உன் தம்பி இறந்து போனவன் மீண்டும் வந்துள்ளான். காணாமல் போனவன் கிடைத்துள்ளான் என்றார்.
    இயேசு சொன்ன இந்தச் சம்பவத்தைப் படிப்போர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    பாவிகளோடு விருந்துண்ணுகிறாரே என்று கேட்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இச்சம்பவத்தைச் சொல்லி விளக்குகிறார். பாவிகள் திருந்த வேண்டும்; திருந்தி தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இதைத்தான் இயேசு பிரான், நற்செய்தியில் பல இடங்களில் எடுத்தியம்புகிறார். இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றியதே, பாவிகளைத் திருத்தி நல்வழியில் சேர்க்கத்தான்.

    எவரிடம் பாவமில்லை. மனிதர்கள் பாவத்தை, அறிந்தும் அறியாமலும் செய்கிறார்கள். எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. பாவிகளை ரட்சிக்கவே மனுமகன் இந்த உலகில் தோன்றினார்.

    இதை நன்கு உணர்ந்து கொண்டால், யாரையும் யாரும் வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். புனித லூக்கா எழுதிய நற்செய்தியின் உட்கருத்தை உணர்வோம். உணர்ந்து பின்பற்றுவோம்.
    (தொடரும்)

    செம்பை சேவியர்
    Next Story
    ×