search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மறுமொழி கொடுக்காத ரத்தம்
    X

    மறுமொழி கொடுக்காத ரத்தம்

    பலிபீடம் சரியாக இருக்கும் போது, பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுளின் திருமுன் வரும்போது நமது பலிபீடங்கள் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு பிறரோடு உள்ள ஒப்புரவு மிக முக்கியம்.
    விவிலியத்தில் ஒரு அற்புதமான நிகழ்வு சொல்லப்பட்டிருக்கிறது. இறைவாக்கினர் எலியாவுக்கும், 850 போலி இறைவாக்கினர்களுக்கும் இடையே ஆன்மிக யுத்தம் ஒன்று நடக்கிறது. அதைப்பற்றி பார்க்கும் முன் கொஞ்சம் பின்னணியைப் பார்க்கலாம்.

    தாவீது மன்னர் இறைவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கையை வாழ்கிறார். அவருக்குப் பின் அவரது மகன் சாலமோன் அரசராகிறார். அவர் கடவுளிடம் ஞானத்தை வரமாய்க் கேட்டு வாங்கியவர். கடவுள் தாவீது மன்னரிடம் சொன்னதன் படி சாலமோன் மன்னன் தேவாலயத்தைக் கட்டுகிறார். சாலமோன் மன்னனின் புகழ் எங்கும் பரவுகிறது.

    பின்னர், சாலமோனின் வீழ்ச்சிக்காலம் வருகிறது. சாலமோனின் வாழ்க்கை முடிகிறது. அவருக்குப் பின் ஒன்றாய் இருந்த இஸ்ரேல் நாடு இரண்டாகிறது. யூதா என்றும் இஸ்ரேல் என்றும் அது இரண்டாகிறது. இஸ்ரேலில் எரோபெயாமும், யூதாவிலே ரெகபயாமும் அரசாள்கின்றனர். அதன் பின் பல அரசர்கள் தொடர்ந்து அரசாள்கிறார்கள்.

    சாலமோனுக்குப் பின் அரசாட்சி செய்தவர்களில் ஆகாப் அரசாட்சி செய்த காலம், எலியா தீர்க்கதரிசியின் காலம். சிலை வழிபாட்டை பின்பற்றத் தொடங்கியதால் இறைவனின் கோபம் அந்த நாட்டின் மீது இருந்தது. வானம் அடைபட்டது. பஞ்சத்தால் மக்கள் மடியத் தொடங்கினர். ஆகாபுக்கு எலியா மீது பகை, அவரைக் கொல்ல தேடிக்கொண்டிருந்தார்.

    இந்த சூழலில் அரண்மனைக் கண்காணிப்பாளர் ஒபதியா மூலமாக ஆகாபைச் சந்திக்க எலியா முயல்கிறார். கொல்ல நினைப்பவன் முன்னால் போய் நிற்பது சாவை விரும்பி அழைப்பது போல என ஒபதியா நினைத்தார். இருந்தாலும் எலியாவின் கட்டாயத்தினால் ஒபதியா அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். அப்படித்தான் எலியாவும் ஆகாபும் சந்திக்கின்றனர்.

    எலியாவுக்கு பயம் இல்லை. இறைவன் அளித்த துணிச்சல் அவரிடம் இருந்தது.

    “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீ தானே?” என ஆகாப் கேட்கிறார்.

    “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல; நீயும் உன் தந்தையின் வீட்டாரும் தான். ஏனெனில் நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்!” என்றார் எலியா.

    இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆகாப் அதிர்ந்து போனான். எலியாவுக்கும், ஆகாபுக்கும் இடையே, ‘உண்மையான கடவுளை வழிபடுவது யார்?’ எனும் கேள்வி வந்து நிற்கிறது.

    ‘நீ உன்னுடைய கடவுளுக்கு பலி கொடு, நான் என் கடவுளுக்கு கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்’ என்றார் எலியா.

    ஆகாபின் பக்கம் 850 போலி இறைவாக்கினர்களும், கடவுளின் பக்கம் ஒரே ஒரு தேவ மனிதரான எலியாவும் நிற்கின்றனர். பலிக்குரிய ஏற்பாடுகள் ஆயத்தமாயின. இப்போது காத்திருக்கும் நேரம். இறைவனின் பதிலுக்காகவும், அவரது செயலுக்காகவும் காத்திருக்கும் நேரம்.

    மனித முயற்சிக்கு கடவுளின் மறுமொழி என்ன? பாகாலின் காளை பலியிடப்படுகிறது. ஆனால் அந்த ரத்தம் மறுமொழி கொடுக்கவில்லை. 850 பேருமாய் சேர்ந்து கத்திப் பார்த்தும், ஆடிப்பாடியும் பாகால் வரவில்லை. செபத்தில் சத்தம் இருந்தால் தான் இறைவனுக்குக் கேட்கும் என்பது பொருளல்ல. ஆவியோடும் உண்மையோடும் செபிப்பதே உண்மை செபம். எலியாவின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    கெத்சமெனே தோட்டத்தில் ஆண்டவர் இயேசு செபித்தார். வேதனையோடு உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை ரத்தத் துளிகளாய் விழுந்து கொண்டிருந்தது. அதை தந்தை கேட்டார்.

    அமைதியாய் செபிப்பது கேட்கப்படாது என்பது தவறான சிந்தனை. செபம் கேட்கப்பட வேண்டுமெனில் நமது பலிபீடங்கள் செப்பனிடப்படவேண்டும். எப்போது ரத்தம் பதில் கொடுக்கும்? பலிபீடம் செப்பனிடப்பட்டதாய் இருந்தால் மட்டுமே பதில் சொல்லும்.

    மனம் கசிந்து புலம்பி அழுது வேண்டினாள் அன்னாள். இறைவனோடு நெருக்கமாய் வேண்டிக்கொண்டிருந்தார். உள்ளத்தால் வேண்டிக்கொண்டிருந்ததால் அவர் உளறிக்கொண்டிருப்பதாய் ஏலி நினைத்தார். அவளோ தனது இதயத்தை இறைவனிடம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. செப்பனிடப்பட்ட பலிபீடம் இறைவனோடு இறுக்கமான உறவைத் தரும். செப்பனிடாத பலிபீடமோ இறைவனிடமிருந்து பதிலைப் பெற்றுத் தராமல் போகும்.

    பலிபீடம் சரியாக இருக்கும் போது, பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுளின் திருமுன் வரும்போது நமது பலிபீடங்கள் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு பிறரோடு உள்ள ஒப்புரவு மிக முக்கியம்.

    நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? நமது பலிகளை இறைவன் ஏற்பதற்காய் நமது பலிபீடங்களை செப்பனிடுகிறோமா?

    Next Story
    ×