search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆணவம் கொள்ள வேண்டாம்
    X

    ஆணவம் கொள்ள வேண்டாம்

    கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.
    மனிதர்கள் வாழும் குடும்பத்திற்குள் சென்று மனிதனை தேட வேண்டியிருக்கிறது. யார் இரக்கமுள்ள மனிதன்? யார் அன்புள்ளம் கொண்ட மனிதன்? யார் தாழ்ச்சி கொண்ட மனிதன் என தேடி அலைய வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவமே. நீயா, நானா என்ற போட்டியே எல்லா இடங்களிலும் காண கிடக்கின்றது.

    யார் பெரியவர்? கணவனா, மனைவியா, மாமியா, மருமகளா? என்பன போலவே போட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த தவக்காலம் இந்த சிந்தனையை உடைத்துக்கூறு போட்டு, உண்மையான மனிதர்களாக நம்மை உருமாற்றட்டும். உண்மையான மனிதர்களிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும். புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி.

    என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார். அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.

    இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.

    தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.

    -அருட்பணி. குருசு கார்மல்,
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    Next Story
    ×