search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தியாகம் செய்ய முன்வருவோம்
    X

    தியாகம் செய்ய முன்வருவோம்

    தியாகம் என்பது சுய விருப்பத்தினால் வருவது, கட்டாயத்தினால் அல்ல. நம்முடைய தியாகத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து அந்த தியாகத்தை மேற்கொள்ளும்போதுதான் நாம் உண்மையான தியாகிகள்.
    தியாகம் என்பது சுய விருப்பத்தினால் வருவது, கட்டாயத்தினால் அல்ல. நம்முடைய தியாகத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து அந்த தியாகத்தை மேற்கொள்ளும்போதுதான் நாம் உண்மையான தியாகிகள். நம் ஒவ்வொருவரின் வாழ்வும், அடுத்தவரின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டு இருக்கிறது என்பதனை நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் இறைமகன் இயேசுவின் வாழ்வு எடுத்து சொல்கிறது. தான் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு நொடிப்பொழுதும் தனக்கென சிந்திக்காதவர், மக்கள் சமூகம் என்பதிலே நிறைவு கண்டவர், அதற்கு பரிசுதான் சிலுவை மரணம். அச்சிலுவை மரணத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார்.

    தவக்காலத்தின் தியாகங்களை புரிந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள இந்நாளில், நமக்காக தியாகங்கள் பல புரிந்த மேன்மக்களை நினைத்து பார்ப்போம். நாம் உயிர் வாழ உயிர் கொடுத்த தாயையும், நமது வாழ்க்கைத்தரம் உயர கடுமையான தியாகங்களை மேற்கொண்ட தந்தையையும் நினைப்போம். நாம் நல் உடை உடுத்த வேண்டும் என்பதற்காக ஆடைகளை தயாரிக்கிற மனிதர்களையும், உணவு அளிக்கிற விவசாயிகளையும் நினைப்போம்.

    அவர்களின் தியாகத்துக்காக இந்நாளில் நன்றி சொல்வோம். நமது வாழ்வின் மிகச்சிறிய தேவைகளில்கூட அடுத்தவரின் தியாகம் அடங்கி இருக்கிறது. தியாகமே மனித சமுதாயத்தின் அச்சாணி. பல நல்மனிதர்களின் தியாகத்தால்தான் நாம் உயிர்துடிப்புடன் இயங்கி கொண்டிருக்கிறோம். நாம் பிறரிடமிருந்து பெற்று கொண்டதை பிறருக்கு அளிப்பதுதானே நீதி. உயிர் கொடுக்கும் தியாகங்களை செய்யவில்லையெனினும் உயிர் காக்கும் தியாகங்களை செய்ய முன் வருவோம்.

    வரலாற்றில் வாழ்ந்து மாமனிதர்களான புத்தர், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றோரெல்லாம் பிற உயிருக்கு தீங்கு நினைக்கக்கூடாது என்பதனையே மாபெரும் வாழ்வு விழுமியாக போற்றினர். தன்னைப்போல் அனைத்து உயிரினங்களையும் மதிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் இழக்க துணிந்த இவர்களின் தியாகம் நம்மை தொடட்டும். இதேபோன்று இறைமகன் இயேசுவின் தியாகத்தையும் ஆழமாக நினைத்து பார்ப்போம். வாரந்தோறும் இயேசுவின் சிலுவைப் பயணத்தில் பங்கெடுத்து ஜெபித்துக் கொண்டிருக்கிற நாம் பிற உயிரினங்களையும் நமக்கு சமமானவர்களாக பாவிப்போம்.

    உடல் ஒறுத்தல்கள் செய்து நம்மை தூய்மைப்படுத்துவது போன்று, உள்ளத்திலும் ஒறுத்தல்களையும் மேற்கொள்வோம். வார்த்தைகளில் கட்டுப்பாடு, வாய்ப்பு இருக்கும் சமயங்களில் கைவிடப்பட்டோரை சந்தித்தல், ஆலயத்தில் ஜெபம் பொருட்களை பகிர்தல், தேவைகளை குறைத்து கொள்ளுதல், உணவு, தண்ணீரை வீணாக்காமல் இருத்தல், இயற்கை உயிரினங்களை போற்றுதல், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளில் அதிக அக்கறையுடன் இறங்குவோம். நமது செயல்பாடுகளும், தியாகங்களும் ஏராளமான மனிதர்களுக்கு இயேசுவை காண்பிக்கட்டும். நாள் தவறாது நல்லதைச் செய்ய முனைப்போடு இறங்குவோம். இயேசுவின் தியாகமான “சிலுவைமரணம்”நமது வாழ்வின் முகவரியாகட்டும்.

    அருட்பணி. குருசு கார்மல்.
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.

    Next Story
    ×