search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்களை மன்னித்த இயேசு
    X

    பாவங்களை மன்னித்த இயேசு

    பிறரது பாவங்களைத் தாம் மன்னித்தது மட்டுமின்றி, தமது அதிகாரத்தை பிறருக்கும் அளித்ததன் வழியாக இயேசு தமது இறைத்தன்மையை ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.
    “பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உரியது” என்பதே அனைத்து சமயத்திலும் காணப்படும் நம்பிக்கையாக இருக்கிறது. ஆகவேதான், பாவங்களுக்கு பரிகாரம் செய்து மன்னிப்பு பெற நாம் ஆலயங்களைத் தேடிச் செல்கிறோம்.

    இயேசு கிறிஸ்து தமது இறைத்தன்மையை உலகிற்கு உணர்த்தும் விதமாக பாவங்களை மன்னித்தார். இஸ்ரயேலில் தோன்றிய எந்தவொரு இறைவாக்கினரும் (தீர்க்கதரிசி) இத்தகைய செயலைச் செய்ததாக விவிலியத்தில் நாம் பார்க்க முடிவதில்லை.

    மக்களை கடவுளுக்கு உரிய வழியில் நடத்திச் செல்வதே இறைவாக்கினர்களின் நோக்கமாக இருந்தது. விபசாரம் உள்ளிட்ட ஒழுக்கக் கேடுகளையும், உண்மை கடவுளுக்கு எதிரான சிலை வழிபாட்டையும் அவர்கள் எதிர்த்தனர். எளியோரை நசுக்கியவர்களும், வறியோரை ஒடுக்கியவர்களும் மனம் திரும்ப வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்தனர். அடக்குமுறையில் ஈடுபடும் ஆட்சியாளர்களும், பணக்காரர்களும் கடவுளின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இறைவாக்கினர்களின் குரலுக்கு செவி கொடுத்த இஸ்ரயேல் மக்கள், மனந்திரும்பி சாக்கு உடை உடுத்தி நோன்பு இருந்தனர். தங்களை வருத்திக் கொண்டு கடவுளிடம் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதால், அவர்கள் மன்னிப்பு பெற்றனர்.

    இறைவாக்கினர் கூறியதை புறக்கணித்த வேளையில், மன்னரும் மக்களும் வேற்று நாட்டவரின் அடக்குமுறைக்கு ஆளாகி துன்புற்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, மன்னிப்பு என்பது இறைவாக்கினரிடம் இருந்தல்ல, கடவுளிடம் இருந்தே வருகிறது.

    இயேசுவுக்கு முன்பு இஸ்ரயேல் மக்கள் நடுவில் தோன்றிய இறைவாக்கினர்கள் அனைவரும் பல அற்புதங்ளைச் செய்ததாக வாசிக்கிறோம். ஆனால் ஒருவர் கூட மற்றவரின் பாவத்தை மன்னித்ததாக நாம் காணவில்லை. மக்களை மனம்மாறத் தூண்டுவதே எல்லா இறைவாக்கினரின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருந்தது.

    இயேசுவைச் சுட்டிக்காட்ட வந்த திருமுழுக்கு யோவான் கூட, “மனந்திரும்பி திரு முழுக்கு பெறுங்கள்” என்றே அழைப்பு விடுத்தார். ஏனெனில், ‘திருமுழுக்கு’ என்பது இறையருளின் வெளி அடையாளமாக உள்ளது.

    இயேசுவின் காலத்தைச் சேர்ந்த யூதர்கள், அவரை இறைவாக்கினர்களில் ஒருவராக பார்த்தனர். ஆனால், தாம் இறைவாக்கினரிலும் மேலான ‘இறை மகன்’ என்பதை இயேசு தமது செயல்கள் வழியாக நிரூபித்தார். இவ்வுலகில் மானிட மகனாக தோன்றிய இயேசு, தம்முடைய இறைத்தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு மக்களின் பாவங்களை மன்னித்தார். ஆகவே, இயேசுவை ஏற்று அவரை நாடிச் செல்வோர் பாவங்களில் இருந்து விடுபடுவது உறுதி.

    ஒருமுறை இயேசு கோவிலில் அமர்ந் திருந்தபோது, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டுவந்து நிறுத்தி, “போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

    இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்” என்று கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

    இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். இயேசு அவரிடம், “அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், “இல்லை ஐயா” என்றார். இயேசு அவரிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

    ‘பாவி’ என்று மக்கள் சுட்டிக்காட்டிய ஒரு பெண்ணை இயேசு காப்பாற்றுவதை இங்கு காண்கிறோம். இயேசுவின் அதிகாரத்தை ஏற்காத சமயத் தலைவர்கள், அவரை சோதிக்கவே அப்பெண்ணை அவரிடம் இழுத்து வந்தனர். இயேசு மாசற்ற இறைமகனாய் இருந்ததால் அப்பெண்ணைத் தீர்ப்பிடும் உரிமை அவருக்கு இருந்தது. இருப்பினும் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணின் பாவங்களை மன்னித்து, அவர் திருந்தி வாழ அழைப்பு விடுத்ததால் இயேசுவின் இறைமாட்சியைக் கண்டுணர்கிறோம்.

    இயேசு பாவங்களை மன்னித்ததாக கூறியதை, யூத சமயத்தலைவர்கள் தெய்வ நிந்தனையாக கருதினர். இயேசுவோ, மானிட மகனாக வந்தாலும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.

    அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

    பின்னர் அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.

    இயேசுவின் அதிகாரம் விண்ணகத்தைச் சார்ந்தது. ஏனெனில், இறைத்தந்தையின் ஒரே மகனாக அவர் என்றென்றும் இருக்கின்றார்.

    “தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறுகிறார்.

    எனவே, நமது பாவங்களை மன்னிக்கவும், அதற்கு தண்டனை வழங்கவும் அதிகாரம் கொண்டவர் மானிட மகனாக தோன்றிய இறை மகன் இயேசுவே. பிறர் குற்றங்களை நாம் மன்னித்தால், நமது குற்றங்களை கடவுள் மன்னிப்பார் என்பதே இயேசுவின் போதனை.

    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தமது திருத்தூதர்களுக்கு அளித்தார்: “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாது இருப்பீர்களோ, அவை மன்னிக்கப் படாது” (யோவான் 20:23).

    பிறரது பாவங்களைத் தாம் மன்னித்தது மட்டுமின்றி, தமது அதிகாரத்தை பிறருக்கும் அளித்ததன் வழியாக இயேசு தமது இறைத் தன்மையை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். பாவிகளின் மனமாற்றத்தை விரும்பும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வது உறுதி.

    -டே. ஆக்னல் ஜோஸ், சென்னை. 
    Next Story
    ×