search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனுக்கு ஏற்புடையவராதல்
    X

    இறைவனுக்கு ஏற்புடையவராதல்

    இயேசுவைக் குறித்த போதனைகளையும், கடவுளுடைய மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்கு என்ன என்பதை பவுல் இந்த நூலில் விவரிக்கிறார்.
    விவிலிய நூல்களில் முக்கியமான ஒரு நூல் பவுல் உரோமையருக்கு எழுதிய நூல். இந்த நூலில் 153 முறை, ‘தேவன்’, ‘கடவுள்’ எனும் வார்த்தை வருகிறது. மனித வரலாற்றில் கடவுளின் செயல்பாடு என்ன என்பதை இந்த நூலில் அவர் எழுதுகிறார். கடவுளுடைய அன்பு, நீதி, கோபம், மீட்பின் திட்டம் என கடவுளின் செயல்பாடுகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

    இயேசுவைக் குறித்த போதனைகளையும், கடவுளுடைய மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்கு என்ன என்பதை பவுல் இந்த நூலில் விவரிக்கிறார். மனித வாழ்வின் போராட்டம் என்ன என்பதை தனது வாழ்க்கையின் மூலமாக அவர் விளக்குகிறார். கடவுளுக்கு ஏற்புடையவர்களாக, நீதிமான்களாக்கும் ஒரு செயலை இயேசுவின் ரத்தம் செய்கிறது.

    மனித வரலாற்றில் மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும், மனித நிலை என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

    “கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?, படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?” (யோபு 4:14) எனும் விவிலிய வசனம்; படைத்தவர், படைப்பு எனும் வித்தியாசத்தை இதன்மூலம் பேசுகிறது.

    “அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா?, யாராலும் முடியவே முடியாது” (யோபு 14:4) என்கிறது விவிலியம். மனிதன் என்பவன் படைக்கப்பட்டவன். அவன் நீதியாகவோ, சுத்தமாகவோ இருக்க முடியாது. அவனை இறைவன் மட்டுமே நீதிமானாக மாற்ற முடியும்.

    மனிதனின் பாவங்கள், கடவுளின் மகிமையைப் பெற முடியாத நிலையில் வைத்திருக்கிறது. சிலுவை அதை மாற்றுகிறது.

    “ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச்செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்” (ரோமர் 3:24) என விவிலியம் நம்பிக்கையளிக்கிறது.

    “தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச்செய்தார்” (ரோமர் 8:30) என்கிறது விவிலியம்.

    கடவுள் முன் குறிக்கிறார், அழைக்கிறார், ஏற்புடையோராக்குகிறார், மாட்சியில் பங்குபெறச் செய்கிறார் எனும் படிப்படியான மாற்றத்தை பவுல் விளக்குகிறார்.

    இதன் பின், குற்றம் சாட்டுதல் என்பது இல்லை. “கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே” (ரோமர் 8:33) எனும் வசனம் நாம் குற்றமற்றவர்களாய் மாறும் உன்னத நிலையைப் பேசுகிறது.

    இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது. “ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது” (ரோமர் 5:18,19) என்கிறது விவிலியம்.

    “முடியாது” எனும் நிலையில் நாம் ஆலயத்துக்கு வருகிறோம், மாற்றம் பெற்றவர்களாக திரும்புகிறோம். இறைவன் அவரது ரத்தத்தின் மூலமாக நம்மை நீதிமான்களாக, அதாவது அவருக்கு ஏற்புடையவர்களாக மாற்றுகிறார்.

    இதனால் நாம் பெறுபவை என்னென்ன?

    1. கடவுளின் சமாதானம்

    “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1). இது பரிசுத்த கழுவுதல். எதை நான் தொலைந்து விட்டு வருகிறேனோ அந்த சமாதானத்தை நான் பெற்றுக்கொள்கிறேன்.

    2. கடவுளின் அன்பு

    “அதன் மூலம் கடவுளின் அன்பு நிரப்பப்பட்டவர்களாக நாம் கடந்து செல்கிறோம். “நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்..” என்கிறது ரோமர் 5:5. கடவுளுடைய சமாதானத்தோடு அவரது முழுமையான அன்பையும் பெற்றுக்கொள்கிறோம்.

    3. கடவுளின் கோபத்திலின்று தப்பித்தல்

    “இனிமேல் ஒருவரும் நம்மை குற்றம் சாட்ட முடியாது” என்கிறது விவிலியம். நாம் கடவுளின் கோபத்திலிருந்தும் நம்மைத் தப்புவிக்கிறது.

    4. கடவுளோடு ஒப்புரவாதல்

    “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால்” (ரோமர் 5:10) எனும் வசனம் நாம் கடவுளோடு ஒப்புரவாதலை உறுதி செய்கிறது.

    5. கடவுளின் மகிழ்ச்சி

    “இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே” (ரோமர் 5:11) என மகிழ்ச்சியையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.

    இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நமக்கு ஒரு பணி தரப்படுகிறது. அது கடவுளின் நாமத்தை மேன்மை பாராட்டும் பணி. அதாவது இறைவனைப் பறைசாற்றுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.

    “கடவுளின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன” என்கிறது சங்கீதம் 34. அவரது கண்கள் நம்மை குற்றம் சாட்டுவதற்காகப் பார்க்கவில்லை. நமக்கு ஆசீர்வாதங்களை அளிக்கவும், நமது குரலைக் கேட்கவும் நம்மை நோக்குகின்றன. நாம் இறைவனை நாடுபவர்களாக, அவரது நாமத்தை பறை சாற்றுபவர்களாக வாழ்வோம்.

    அருட்பணி, வெலிங்டன் ஜேசுதாஸ்.
    Next Story
    ×