search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உண்மை என்பது இயேசுவின் பெயர்
    X

    உண்மை என்பது இயேசுவின் பெயர்

    பாவத்தைக் கழுவ, பழுதற்ற விலங்குகளின் ரத்தம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது இறைமகன் இயேசுவின் ரத்தம் பலியாக சிந்தப்படுகிறது.
    இயேசு ஒரு இடத்தில் போதனை செய்து கொண்டிருக்கிறார். மாலையாகிறது, கால்நடையாய் வந்த கூட்டம் பசியை மறந்து அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

    இயேசு அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனும் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தினார். வந்திருந்தவர்களில் ஆண்கள் மட்டும் ஐயாயிரம் பேர்.

    கைவசம் இருந்ததோ ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும். அவற்றைக் கொண்டு அத்தனை பேருக்கும் இயேசு உணவளித்தார். இந்த அதிசய செயலை நான்கு நற்செய்தியாளர்களும் குறித்து வைத்திருக்கின்றனர்.

    அதன் பின்னர் மக்கள் இயேசுவின் போதனைகளை நாடாமல், உணவை நாடி அவரை அணுகினார்கள்.

    இயேசு அவர்களிடம் “உணவுக்காக என்னைத் தேடுகிறீர்கள், உண்மையில் நான் அழியாத உணவு” என தன்னையே உணவாக இயேசு அவர்கள் முன்னால் வெளிப்படுத்துகின்றார். அவரே உண்மையான உணவு.

    உண்மை என்பது வாய்மொழியால் வருவது மட்டுமல்ல, அது நிலையாக இருப்பது. அதனால் தான் இயேசு தன்னை ‘நானே உண்மை’ என்கிறார்.

    உண்மை என்பது எங்கு தொடங்கி, எதுவரை பயணிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘கடவுள் உண்மையில் உயர்ந்தவர்’ என்கிறது சங்கீதம்.

    அதாவது ‘உண்மை’ யைப் பொறுத்தவரை அவரை விடப் பெரியவர் யாரும் இல்லை. உண்மையின் உச்சம் என்பதே இயேசு தான். இதுவே அதன் பொருள். இது கடவுளின் பண்புகளில் ஒன்று.

    “ஆண்டவரே உண்மையான கடவுள், அவரே வாழும் கடவுள், என்றும் ஆளும் அரசர்” என்கிறது எரேமியா 10:10.

    “அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” என்கிறது சங்கீதம் 146:6.

    “அவருடைய உண்மையானது தலைமுறை தோறும் உள்ளது” என்கிறது சங்கீதம் 100.

    இந்த உண்மையின் கடவுள், உண்மையில் உயர்ந்தவர், உண்மையைக் காக்கிறவர், தலைமுறை தோறும் உள்ள உண்மையின் கடவுள். அவர் தான் மனிதனாக மண்ணில் வெளிப்பட்டார்.

    உண்மை எனும் கடவுளின் சாயல், கிறிஸ்துவின் சாயலாக மண்ணில் வெளிப்பட்டது. “கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை” என இயேசு குறிப்பிடுவதில் கடவுளின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.

    அவர் இப்படி மொழிகிற உண்மை, மக்களில் வெளிப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார். “உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது” (எபேசியர் 4:21) என்கிறது விவிலியம்.

    கடைசியில் இயேசுவே அந்த உண்மை என்பதும் யோவான் நற்செய்தியில் தெளிவாகிறது. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவான் 14:6) என்றார் இயேசு.

    இயேசுவிடம் உண்மை இருந்தது, இயேசுவே அந்த உண்மை, இதுவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்.

    “வாழ்வு தரும் உணவு நானே” (யோவான் 6:35) என இயேசு தன்னைப்பற்றிக் கூறுகிறார். இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் அலைந்த காலத்தில் வானத்திலிருந்து ‘மன்னா’ என்ற உணவு கொடுக்கப்பட்டது. அதை மோசே கொடுத்ததாக மக்கள் கூறினர்.

    இயேசுவோ, ‘அதை மோசே கொடுக்கவில்லை, எனது பிதாவே அதைக் கொடுத்தார்’ என்றார்.

    இன்று அதே பிதா ‘உண்மை’ யாம் இயேசுவை உணவாக பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ‘மன்னா’ முடிவுடைய உணவு, மகனோ முடிவற்ற வாழ்வைத் தரும் உணவு.

    உண்மை நமக்கு முடிவற்ற வாழ்க்கையைப் பெற்றுத் தருகிறது, என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.

    உண்மை என்பது புதிய வாழ்க்கையின் அடையாளமாக விவிலியத்தில் சொல்லப்படுகிறது. அது புது வாழ்வு சார்ந்தது, புது வாழ்வுக்கான வழியைச் சார்ந்தது.

    “நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்” (1 யோவான் 1:9) என்கிறது விவிலியம். இந்த உண்மை நிரந்தர மாற்றத்தை நமக்கு பெற்றுத்தருகிறது.

    மீண்டும் பாவத்தில் விழாமல் நம்மைக் காக்கும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. ‘உண்மை’ நம்மை பாவத்தில் விழாமல் காக்கிறது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம்.

    பாவத்தைக் கழுவ, பழுதற்ற விலங்குகளின் ரத்தம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது இறைமகன் இயேசுவின் ரத்தம் பலியாக சிந்தப்படுகிறது.

    விலங்குகளின் ரத்தம் பாவத்திலிருந்து தற்காலிக தப்பித்தலைத் தந்தது, இயேசுவின் ரத்தம் மட்டுமே நிரந்தர மீட்பைத் தருகிறது.

    இயேசு உண்மையாக இருக்கிறார், தந்தையிடம் கற்ற உண்மையைப் பேசுகிறார். அவரை நாம் உண்மையுடன் அணுகவேண்டும். அப்போது உண்மையாகவே நமது பாவத்திலிருந்து மீட்பும், நிலைவாழ்வும் கிடைக்கும். 
    Next Story
    ×