search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடவுளுக்கு ஏற்ற வாழ்வு
    X

    கடவுளுக்கு ஏற்ற வாழ்வு

    பிறர் வாழ்வு பெற தன் உயிரை விதையாக்கி கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். வாழ்வு என்பது இறைவனின் மாபெரும் கொடை.
    கடவுளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டாரா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். தன்னலத்தை துறந்து, பிறர் நலனுக்காக வாழ்பவர்களை கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் நமது வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.

    இறைமகன் ஏசு தனது சீடர்களிடம்.., '' என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (லூக்.9:23) என்று கூறினார். அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக, தன்னலமற்று அர்ப்பணிப்பை முன்னெடுக்கும் எவருக்கும் அவமானமும், வேதனையும் கூடிய சிலுவை காத்திருக்கிறது. இந்த சிலுவையை நாள்தோறும் தூக்கிச் சுமந்து, அவருக்காகவே வாழுகிற மனிதன் தான் கிறிஸ்தவன்.

    கிறிஸ்தவத்தின் வெளி அடையாளங்கள், கடவுளையும், மனிதனையும் இணைக்க உதவாது. கடவுளின் வார்த்தைகளை அல்லது கட்டளைகளை வாழ்வாக மாற்றிக் கொள்ளும் போது தான், கடவுளால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்.' நான் என் தந்தையின் கட்டளைகளை கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் (யோவான்.15:10) என்கிறார் ஏசு.

    பிறர் வாழ்வு பெற தன் உயிரை விதையாக்கி கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். வாழ்வு என்பது இறைவனின் மாபெரும் கொடை. ஏசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த வாழ்வும், அவரது மரணமும், நமக்கு உணர்ந்தும் தெளிவான பாடங்கள் இவை. '' தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.

    மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.'' (பிலிப்.2:7-9) எனவே நாமும் நம்மை தாழ்த்தி, தன்னலத்தை துறந்து, ஏசுவைப்போல வாழ்வோம். நம் வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாக இருக்கும். அப்போது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வார். நமக்குள் இறைவனின் அமைதி என்றும் இருக்கட்டும்.

    சகோதரி. ஆல்பெட்டினா
    Next Story
    ×