search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் வடக்கு கோணத்தில் உள்ள புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வடக்கு கோணத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து அருட்பணியாளர் ஷாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    11-ந் தேதி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. பின்னர் இரவு 8.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    12-ந் தேதி நடைபெறும் திருப்பலிக்கு மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆக்னஸ் மறையுரையாற்றுகி றார். அதன் பிறகு நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெறுகிறது.

    13-ந் தேதி அமராவதிவிளை பங்குத்தந்தை அந்தோணியப்பன் திருப்பலியும், அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் மறையுரையும் நிறைவேற்றுகிறார்கள். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    14-ந் தேதி திருப்பலியை அருட்பணியாளர் மரியதாஸ் நிறைவேற்றுகிறார். தாமஸ் அருளானந்தம் மறையுரையாற்றுகிறார். 15-ந் தேதி காலையில் தார்சியுஸ்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதனையடுத்து சேவியர் மறையுரையாற்றுகிறார். இதே போல் மாலையில் நடைபெறும் திருப்பலிக்கு ஆன்டனி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். சேவியர் சுந்தர் மறையுரையாற்றுகிறார்.

    16-ந் தேதி அருட்பணியாளர் அந்தோணிபிச்சை தலைமையில் திருப்பலியும், சேவியர் சுந்தர் தலைமையில் மறையுரையும் நடக்கிறது. 17-ந் தேதி திருப்பலிக்கு ஐசக்ராஜ் தலைமை தாங்குகிறார். மரியசூசை வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். 18-ந் தேதி காலையில் பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையிலும், மாலையில் சேவியர் பெனடிக்ட் தலைமையிலும் திருப்பலி நடக்க இருக்கிறது. இதே போல் அமலதாஸ் டென்சிங் மற்றும் ஜெகத் கஸ்பார் ஆகியோர் மறையுரையாற்றுகிறார்கள்.

    விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் ஞாயிறு திருப்பலிக்கு ஜோக்கின் தலைமை தாங்குகிறார். திருவிழா திருப்பலியையும், மறையுரையையும் மறைமாவட்ட முதன்மை பணியாளர் கில்லாரிஸ் நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர் பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியன நடக்க உள்ளன.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரவிகாட்சன் கென்னடி, பங்கு பேரவையினர், பங்கு மக்கள், அருட் சகோதரிகள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×