search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இமயமாகும் இறைநம்பிக்கை
    X

    இமயமாகும் இறைநம்பிக்கை

    இமயமாகும் இறைநம்பிக்கையை உள்ளத்தில் வைத்து புதைக்காமல், செயல் வடிவத்தில் உலாவ விடுங்கள், வாழ்வு வளமாகும் பிறருக்கும், நமக்கும்.
    நம்முடைய சமுதாயத்தின் அடிப்படை சக்தி நம்பிக்கை. இந்த சக்தியை எதன் மீது விரயம் செய்கிறோம் என்பதில் தான் நாம் செழிப்படைவதும், செல்லாக்காசாவதும் இருக்கிறது. எதன் மீது நம் நம்பிக்கை இருக்க வேண்டும்? யாரை சார்ந்து நம் வாழ்வு இருக்க வேண்டுமென்பதை இன்றைய எரோமியாவின் இறைவார்த்தைகள் புலப்படுத்துகின்றன. மனிதரில் நம்பிக்கை வைப்பதை தவிர்க்க வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்கள் நீரோடை அருகில் நடப்பட்ட செழித்து கனி தரும் மரம் போலவும், மனிதரில் நம்பிக்கை வைப்போர் பாலை நிலத்தில் நடப்பட்ட உலர்ந்த மரம் போலவும் ஆவர் என்றும் தெரியப்படுத்துகிறார் இறைவன்.

    ஆகவே! நாம் பெற போகின்ற தீர்ப்பு, நமது செயல் சார்ந்தவையாக தான் இருக்கும். இறைவன் நம் உள்ளத்தை ஊடுருவி பார்ப்பவர். அவரிடம் மறைத்து, எதையும் நம்மால் செய்ய முடியாது. இதனால் தான் இறைவன் நம் இதயங்களை சோதித்தறிவது போல நாம் இத்தவக்காலத்தில் நம் இதயத்தை சோதித்தறிந்து இருளிலிருந்து ஒளிமயமான வாழ்விற்கு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

    இத்தகைய செயல் வடிவம் பெறுகின்ற இறைநம்பிக்கை எப்படி இருக்கும்? இருக்க வேண்டுமென்பதை லாசர், பணக்காரர் கதை வழியாக நமக்கு விளக்குகிறார். ஏழைகளுக்கு உதவுவது நம் எல்லோருடைய கடன் அல்லது கடமை என்பதை இந்த கதை உணர்த்துகின்றது. ஏசுவின் காலத்திற்கு மட்டும் பொருந்திய கதையல்ல, நம் லாசருடைய கதை. இன்று நாம் காணும் சமுதாயத்தின் அவல நிலையை சுட்டிக் காட்டும், நீதியின் அளவு கோலாகவும், இக்கதை நமக்கு பாடம் புகட்டுகின்றது.

    இன்றும் உணவின்றி, உடையின்றி நிற்கும் கூட்டம் ஒரு புறம். தேவைக்கு மிஞ்சியவற்றை குப்பையில் வீசும் கூட்டம் மறுபுறம். இந்த சவாலை சமாளிப்பதே இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்த உதவும் சூழ்நிலை. இமயமாகும் இறைநம்பிக்கையை உள்ளத்தில் வைத்து புதைக்காமல், செயல் வடிவத்தில் உலாவ விடுங்கள், வாழ்வு வளமாகும் பிறருக்கும், நமக்கும்.

    - கிருபாகரன், மறைப்பணி நிலையம், கும்பகோணம். 
    Next Story
    ×